

லாக்டவுனில் சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆணுறை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக விற்பனையானது தெரியவந்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 23-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் இணையதளமான Dunzo புதிய சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அதில், நாடு முழுவதும் ஆணுறை விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


Dunzo ஆய்வின்படி, மும்பை, பெங்களுரு நகரங்களில் 3 மடங்கு அதிகமாக ஆணுறை விற்பனையாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஹைதராபாதில் 6 மடங்கும், சென்னை, ஜெய்பூர் நகரங்களில் 5 மடங்கும் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் காட்டிலும் பகல் நேரங்களில் அதிகளவு ஆணுறை விற்பனையாகியுள்ளது. இதேபோல், ஐ பில்ஸ் மற்றும் கர்ப்பம் தரித்ததை கண்டுபிடிக்கும் கருவிகளின் (pregnancy test kits) விற்பனையும் அதிகரித்துள்ளது.


பெங்களுரு, ஹைதராபாத், பூனே, குர்கான் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் contraceptive pills எனப்படும் கருத்தடை மாத்திரைகள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. அதேபோல், ஜெய்ப்பூர் நகரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் pregnancy test kits அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் இயல்பாகவே கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறியிருந்தனர். வேலை பளு, மன அழுத்தம் உள்ளிட்டவை கொரோனா காலத்தில் தம்பதிகளிடையே குறைந்தது இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்தனர்.


இதனால், குழந்தையின்மைக்காக மருத்துவமனைக்கு செல்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்ததாகவும் மன நல மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆணுறைக்கு அடுத்தப்படியாக, ரோலிங் பேப்பர்ஸ் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. ரோலிங் பேப்பர்ஸ் சிகரெட், கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை சுருட்டிக் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. சென்னையுடன் ஒப்பிடும்போது பெங்களுருவில் ரோலிங் பேப்பர்ஸ் விற்பனை 22 மடங்கு கூடுதலாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.


உணவு வகைகளில் விற்பனை நகரத்துக்கு நகரம் மாறுபடுவதாக தெரிவித்துள்ள ஆய்வு, கூர்கான் நகரில் (Gurgaon) ஆலு டிக்கி பர்க்கர்ஸ் (aloo tikki" burgers) அதிகளவில் விற்பனையாகியுள்ளது. மும்பைவாசிகள் தால் கிச்சடி(dal khichdi) மற்றும் மேகி (Maggie) உணவுகளை அதிகளவில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். பெங்களுருவில் சிக்கன் விற்பனை அமோகமாக இருந்துள்ளது. உணவுகளை டெலிவரி செய்வதில் முன்னணியில் உள்ள ஆன்லைன் நிறுவனமான ஸ்விகி (Swiggy) நடத்திய ஆய்வில், ஒருசில பிரியாணி வகைகள் நொடிக்கு ஒருமுறை ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.


மேலும், கொரோனா காலத்தில் வீட்டில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கும் அதிக வரவேற்பு இருந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் வருட கணக்கின்படி, 3 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிரியாணியை ஆர்டர் செய்திருப்பது தெரியவந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வேலை இடங்களுக்கு டெலிவரி செய்வதைக் காட்டிலும் வீடுகளுக்கு 5 விழுக்காடு கூடுதலாக டெலிவரி செய்ததாக தெரிவித்துள்ள ஸ்விகி, ஏப்ரல் மே மாதங்களில் அவை 9 விழுக்காடாக அதிகரித்ததாகவும் கூறியுள்ளது.