2022ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனாவின் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் தொற்று பல மடங்கு அதிகரித்திருந்தாலும், தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீதம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், தொற்றிலிருந்து தப்பிக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டு மக்கள் கொரோனாவுடன் வாழ பழகி வருகின்றனர். அப்படி கொரோனாவுடன் வாழ பழகி வருபவர்களிடம் இருக்க வேண்டிய 5 முக்கிய பொருட்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. சுய பரிசோதனை கருவிகள் : இந்தியாவில் ஒமைக்ரான் அலை தீவிரமாக பரவியதை அடுத்து, சுய பரிசோதனை கருவிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக புனேவைச் சேர்ந்த Mylab Discovery Solutions நிறுவனம், ரேப்பிட் டெஸ்ட் கிட்களை வணிக ரீதியாக விற்பனை செய்து வருகிறது. இதன் விற்பனையும் ஜனவரிக்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது 5 மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதை நீங்கள் கையில் வைத்திருந்தால் லேசான அறிகுறிகள் தென்பட்டதும், வீட்டிலேயே பரிசோதனை செய்து சில நிமிடங்களில் ரிசால்ட்டை அறிந்து கொள்ளலாம்.
2. இம்யூனிட்டி சப்ளிமெண்ட்ஸ் : கொரோனா காலத்தில் மக்கள் அனைவருக்கும் மிகவும் தேவைப்பட்ட மற்றொரு விஷயம் நோய் எதிர்ப்பு சக்தியாகும். தொற்று பரவிய காலத்தில் ஆயுர்வேதம் முதல் அலோபதி வரை குறிப்பிடப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கான பல்வேறு விஷயங்களை மக்கள் பின்பற்றினர். மருந்து ஆராய்ச்சி நிறுவனமான AIOCD-AWACS இன் தரவுகளின்படி, இந்தியர்கள் 2021ம் ஆண்டு மட்டும் 5 பில்லியனுக்கும் அதிகமான வைட்டமின் சி மற்றும் துத்தநாக மாத்திரைகளை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
3. ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்சிமீட்டர்கள் மற்றும் நீராவி இன்ஹேலர்கள் : 2021ம் ஆண்டு கொரோனாவின் டெல்டா வைரஸ் பரவலால் இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியது. தற்போது இந்தியாவில் ஆக்சிமீட்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டிற்குள்ளேயே அடிப்படை மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நிலைக்கு மக்களை கோவிட் தொற்று மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. மாஸ்க் : கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திய பொருட்களில் முதன்மையானது முகக்கவசங்கள் தான். துணியால் ஆனது முதல் N95 வரை விதவிதமான மாஸ்குகள் விற்பனையாகின. கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றின் மூலம் பரவக்கூடியவை என்பதால் தேவையான அளவிற்கு மாஸ்க்கை கையிருப்பு வைத்திருப்பதும், அவற்றை முறையாக பயன்படுத்துவதும் கட்டாயம் ஆகும்.
5. வீட்டிலேயே ஆபிஸ் செட் அப் : உலக சுகாதார நிறுவனம் கொரோனா நம்மை விட்டு முற்றிலும் அகன்றுவிட்டதாக அறிவிக்கும் வரை, பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற வைக்கலாம் என பல நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. எனவே கொரோனாவுடன் போராட வேண்டிய சூழ்நிலை தவிர்க்க வீட்டிலேயே அலுவலகத்திற்கான அறையை தயார் செய்து கொள்ளுங்கள்.