1990-களில் பிளாஸ்டிக்கும், பாலிதீனும் அதிகளவில் புழக்கத்திற்கு வந்தபோது, அதற்கு மரங்களின் நண்பன் என்று பெயரிட்டனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். காகிதங்களுக்காக இனி மரங்களை வெட்ட வேண்டாம். பொருட்கள் வெளியே தெரிவதால் தரம் பார்த்து வாங்கலாம். பூஞ்சை, பாக்டீரியா பாதிப்பில் இருந்து உணவுகளை பாதுகாக்கலாம். இப்படி பலவிதமாக புகழ்ந்து கொண்டாடினார்கள் பாலித்தீனையும், பிளாஸ்டிக்கையும் மக்கள்.
ஆனால் இன்று, சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் முதல் பொருள் எது என்றால், 30 ஆண்டுகளுக்கும் முன் மக்கள் கொண்டாடித் தீர்த்த பிளாஸ்டிக்தான். வீட்டுக்கு வெளியே நாம் தூக்கி வீசும் பிளாஸ்டிக் குப்பைகள், நமது உடலுக்குள்ளேயே ஓடத் தொடங்கிவிட்டது என்பது அண்மையில் வெளியான அதிர்ச்சித் தகவல்களில் ஒன்று. காய்கறி, மளிகை, பழம், இறைச்சி, ஜவுளி என எதை வாங்கச் சென்றாலும் நம்மோடு ஒட்டிக் கொண்டு வரும் பொருட்களில் முதன்மையானது பாலிதீன் பைகள்
சூடான உணவை பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரப்பிக் கொண்டு வேலைக்குச் செல்கிறோம். பிளாஸ்டிக் கப்புகளில் சூடான காபியை குடிக்கிறோம். வீடுகளில் இருக்கும்போது கூட பலர் தண்ணீர் குடிக்க பயன்படுத்துவதும் பிளாஸ்டிக் பாட்டில்களே. இவ்வாறு, மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொன்றிலும் இடம்பிடித்துள்ள பிளாஸ்டிக், துகள்களாக மாறி உணவு, தண்ணீர், சுவாசிக்கும் காற்று வரை கலந்து விட்டதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
மனிதர்களின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என்ற சின்னஞ்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிட்டதை உறுதி செய்துள்ளது அண்மையில் நடைபெற்ற ஆய்வு. நெதர்லாந்தில் Vrije Universiteit Amsterdam பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு 22 பேரை சோதனைக்கு உட்படுத்தியது. ஒவ்வொருவரின் ரத்தத்தையும் எடுத்து, நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம், 22 பேரில் 17 பேரின் உடல்களில் பிளாஸ்டிக் நுண் துகள்களும் ரத்தத்தோடு ஓடிக் கொண்டிருந்ததுதான்.
ஒவ்வொருவரின் ரத்தத்திலும் 700 நானோ மீட்டர் அளவு கொண்ட பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 700 நானோ மீட்டர் என்பது நமது முடியை விட 140 மடங்கு சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகளாகும். 17 பேரில் பெரும்பாலானோரின் ரத்தத்தில் கலந்திருப்பது பாலிஎதிலீன் டெரெப்தாலேட். இது தண்ணீர் பாட்டில் தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் என்பதுதான் உச்சபட்ச அதிர்ச்சி.
மேலும் சிலரது ரத்தத்தில் இருந்தது பாலிஸ்டிரீன் பிளாஸ்டிக். இது உணவை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக். ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் போடப்படும் ஒரு ஸ்பூன் சக்கரை அளவுதான், நமது உடலில் கலந்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு என்று விளக்கம் சொல்லும் ஆய்வாளர்கள், ஒவ்வொரு நபரும் நாளொன்றுக்கு 320 பிளாஸ்டிக் துண்டுகளை உட்கொள்கிறார்கள் என்றும் பீதியை கிளப்புகிறார்கள்.