தற்போது மாறிவரும் வாழ்க்கை முறைகளினால் பல்வேறு மக்களும் வாழ்வாதாரத்திற்காகவும், வேறு பல நோக்கங்களுக்காகவும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்கின்றனர். அதேபோல பல்வேறு நாடுகள் மற்றும் இனங்களை சேர்ந்த மக்களும் ஒரு சேர வாழும் சூழல் உண்டாகியுள்ளது. அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது மொழி தான். ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியின் மீது மிகவும் பெருமை கொண்டிருந்தாலும் கூடவே வேறு ஒரு புதிய மொழியையும் கற்றுக் கொள்வதின் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும்.
இன்றைய காலத்தில் பள்ளியிலேயே தாய்மொழி தவிர கூடுதலாக ஒரு மொழியானது மாணவர்களுக்கு பயிற்றுவிக்கபடுகிறது. முக்கியமாக ஆங்கில மொழியானது நம்முடைய நாட்டின் இரண்டாவது தேசிய மொழியை போல மாறிவிட்டது. எப்படி இருந்தாலும் இன்றைய காலத்தில் சர்வதேச தொடர்புகள் சர்வ சாதாரணமாக ஏற்பட்டு விடுவதால் நம்முடைய தாய்மொழியை தாண்டி வேறு சில மொழிகளையும் கற்றுக் கொள்ளும் தேவை உருவாகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு தாய்மொழி இல்லாமல் வேறொரு மொழியை கற்றுக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தொழில் முன்னேற்றம் : இன்றைய காலத்தில் எல்லைகள் தாண்டி, கடல் தாண்டி வேலை செய்வது என்பது மிக சாதாரணமாகிவிட்டது. படித்துவிட்டு வேலை தேடி வெளிநாடு செல்பவர்களும், தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களும் மிக அதிக அளவில் பெருகிவிட்டனர். இவர்கள் அனைவருமே தங்கள் தாய்மொழி இல்லாமல் தாங்கள் செல்லும் நாடுகளில் பேசப்படும் சில முக்கிய மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும். உடன் வேலை பார்ப்பவர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளவும், அலுவலகங்களில் முக்கிய இடத்தை பிடிக்கவும் அந்தந்த நாட்டு மொழிகளை கற்றுக் கொள்வது அவசியமாகிறது.
மேம்பட்ட அறிவாற்றல் திறன் : புதிய மொழிகளை கற்று கொள்வதன் மூலம் நமது அறிவாற்றலும் அதிகரிக்கிறது. ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் போதே நமது கவனிக்கும் திறன் அதிகரிக்கிறது. கூடவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன், அதிக நினைவாற்றல், முடிவு எடுக்கும் திறன் ஆகியவை அதிகரிக்கிறது. எனவே நீங்கள் முன்னர் இருந்ததை விட வாழ்வில் ஒரு படி முன்னேறுவதற்கு இவை அனைத்தும் உதவுகிறது.
மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது : புதிய மொழிகளை நாம் கற்றுக் கொள்வதன் மூலம் நமது மூளையில் பல்வேறு பாகங்கள் தூண்டப்படுகின்றன. ஏனெனில் ஒரு புதிய மொழியை நாம் கற்றுக் கொள்ளும் போது, நமது மூளை அதற்கு ஏற்ப செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது. மூளைக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைவதால் நாளடைவில் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது. ஒரே ஒரு மொழி பேசுபவர்களை விட பல மொழிகள் பேசுபவர்களுக்கு அல்சைமர் நோய் தாக்கும் அறிகுறிகள் ஆனது 4-5 வருடங்கள் தாமதமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மற்றவருடன் தொடர்பு கொள்வதில் முன்னேற்றம் : புதிய மொழிகளை நாம் கற்றுக் கொள்ளும் போது இயல்பாகவே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் நம் திறனும் அதிகரிக்கிறது. நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களை மிக தெளிவாகவும் சுருக்கமாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உங்களால் மற்றவருக்கு எடுத்துரைக்க முடியும். அதுபோலவே பல்வேறு புதிய விஷயங்களை கிரகித்துக் கொள்ளவும் புதிய விஷயங்களை புரிந்து கொள்ளவும் இது உங்களுக்கு உதவும்.
கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் : ஒரு மொழி பற்றி புதிதாக கற்றுக் கொள்ளும் போதே அதன் கலாச்சாரத்தை பற்றியும் நம்மால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் ஒரு கலாச்சாரத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் நம்மால் ஒரு புது மொழியை கற்றுக் கொள்ள முடியாது. எனவே நீங்கள் தாய்மொழி இல்லாமல் புதிய மொழிகளை கற்றுக் கொள்ளும் போதே பல்வேறு விதமான கலாச்சாரங்களை பற்றியும் பாரம்பரியங்களை பற்றியும் கற்றுக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக உங்களுக்கு இது அமையும்.