கர்ப்பகாலம் முழுவதும் மகிழ்ச்சியும் பரபரப்புமாக இருந்தாலும், உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்களால் உண்டாகும் மன நிலை மாற்றங்கள் ஆகிய இரண்டுமே கர்ப்பிணிகளை கொஞ்சம் சிரமப்படுத்தும். உடல் ஆரோக்கியத்துக்கு உணவுகள், ஊட்டச்சத்து மருந்துகள் என்று இருந்தாலும், குழந்தை ஆரோக்கியமாக வளர மன அமைதியும் மிகவும் முக்கியம். சின்ன சின்ன விஷயங்கள் முதல் அலுவலகம் அல்லது குடும்பத்தில் பிரச்சனையால் தீவிரமான ஸ்ட்ரெஸ், பதட்டம் ஆகியவை கர்ப்பிணிகளை பாதிக்கலாம். எந்த சூழலாக இருந்தாலும், இன்னர் பீஸ் (inner peace) என்பதைப் பெற, கர்ப்பிணிகளுக்கு நடத்தப்படும் ப்ரீ-நேடல் யோகா வகுப்புகள் பெரிதும் உதவும். இதனால், பிரச்சனைகளை டென்ஷன் ஆகாமல், உடலுக்கும் மனதுக்கும் பாதிப்பு ஏற்படாமல் எளிதில் எதிர்கொள்ளலாம்.
ப்ரீநேடல் யோகா வகுப்புகள் சேர்வதன் மூலம், எளிய யோகா ஆசனப் பயிற்சிகள், மூச்சு பயிற்சி ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். இதனால், உடல் நெகிழ்வாகவும், பிரவசம் சுலபமாகவும் மாறும். பிரசவ நேரத்தில் பயமும் பதட்டமும் குறையும் அளவுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். ப்ரீ நேடல் யோகா வகுப்பில் சேர்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.
உடல் முழுவதும் ஸ்ட்ரெட்ச் ஆகும் : கர்ப்ப கால யோகா வகுப்பில் உடல் முழுவதும் ஸ்ட்ரெட்ச் ஆகும் பயிற்சிகள் வழங்கப்படும். குழந்தைக்கும் தாய்க்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல், மென்மையான ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் வழங்கப்படும். குழந்தை வயிற்றில் வளரும் பொழுது உடல் எடை அதிகரிப்பதன் காரணத்தால் முதுகுவலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, மற்றும் கால் வலி ஆகியவை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கும் கிராம்ப் எனப்படும் கால்களில் தசைப்பிடிப்பும் உண்டாகும். ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்வதன் மூலம் வலி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் உடலும் அதிக நெகிழ்வுத்தன்மை பெரும், தசைகள் வலுவாகி ரத்த ஓட்டம் சீராகும்.
மூச்சுப்பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் குறைத்தல் : மூச்சுப்பயிற்சி எப்படி செய்வது என்பதை சரியான முறையில் கற்றுக் கொண்டால் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஆகியவற்றை எளிதில் தவிர்க்க முடியும். கர்ப்ப காலத்தில் சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய அளவு கர்ப்பிணிகள் பதற்றப்படுவார்கள். அது மட்டுமில்லாமல் எடை அதிகரிப்பு மற்றும் ஒரு சில உணவுகள் சாப்பிடும் பொழுது மூச்சடைப்பு, அதிக தூரம் நடந்தால் இளைப்பு ஆகிய பிரச்சினைகளும் கர்ப்பிணிகளுக்கு பரவலாக காணப்படும். மேலும் பிரசவ நேரத்திலும் மிகவும் சிரமப்படுவார்கள். ப்ரீநேடல் யோகா வகுப்பில் முறையாக மூச்சுப்பயிற்சி கற்றுக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளை எளிதில் தவிர்க்கலாம். மன அழுத்தத்தை குறைத்து உங்க தசைகளை நீங்கள் எந்த சிரமமுமின்றி கட்டுப்படுத்தலாம்.
உடல் ரிலாக்ஸ் ஆகி குளிர்ச்சியடையும் : கர்ப்ப கால பயிற்சியின் ஒவ்வொரு வகுப்பிலுமே நீங்கள் உடலை எப்படி ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்பது கற்றுத் தரப்படும். இதன் மூலம் உங்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்காமல் உடலை ரிலாக்ஸ் செய்ய முடியும். அதிக ரத்த அழுத்தத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குறைப்பிரசவம் ஆகும் வாய்ப்பு உள்ளது. எனவே உடலை நீங்கள் ரிலாக்ஸாக வைத்திருக்க கற்றுக் கொள்வதன் மூலம் இதனை தவிர்க்க முடியும்.
நல்ல தூக்கம், உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் : இந்த வகுப்புகளில் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு யோகா பயிற்சிகள் ஆசனங்கள் எப்படி செய்ய வேண்டும் என்பது கற்றுத் தரப்படும். உங்கள் உடலை வலிப்பெரச் செய்யும் அதே நேரத்தில் பிரசவ நேரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு பெருமளவில் உதவி செய்யும். அதுமட்டுமில்லாமல் கர்ப்பிணி பெண்கள் யோகா பயிற்சி செய்யும் பொழுது சப்போர்ட்டாக சில உபகரணங்களும் பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் பயமின்றி யோகா பயிற்சியை செய்யலாம்.
யோகா கற்றுக் கொண்டவர்களுக்கு உடல் வலுவாக இருப்பதோடு நெகிழ்வாகவும் இருக்கும். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவும். பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்வுகோளாறு, நெஞ்செரிச்சல், அசிடிட்டி ஆகியவற்றையும் தடுக்க முடியும்.