பெரும்பாலான மனிதர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பறவைகள், விலங்குகளில் தொடங்கி பாம்பு, முதலை, சிங்கம் என செல்ல பிராணிகளின் மீதான மனிதனின் காதலுக்கு அளவில்லை. அவ்வாறு ஆசையுடனும், மன உற்சாகத்திற்காகவும் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பதில் அக்கறையும், கவனமும் மிக அவசியமானது. உதாரணத்திற்கு நாய் எடுத்து கொண்டால், உணவு பழக்க வழக்கங்களில் இருந்து, சரியாக தடுப்பூசி செலுத்தி அதை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கப்படும் செல்ல பிராணிகளை சிலர் எங்கு சென்றாலும் தன்னுடனே அழைத்து செல்ல விரும்புவர்.
சாதாரணமாக உள்ளூர் சாலைகளிலும், கார், இருசக்கர வாகனங்களில் செல்ல பிராணிகளை அழைத்து செல்வதில் எந்தவித கட்டுப்பாடும், தடைகளும் இல்லை. ஆனால், மாநிலத்தை விட்டோ, நாட்டை விட்டோ அல்லது கண்டம் தாண்டி செல்லப்பிராணிகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து செல்ல வேண்டும் என்றால் நடமுறை சிக்கல்களும், செலவுகளும் உள்ளன.
செல்லப்பிராணிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது கடினமான பணியாக இருக்கும் என்பதே உண்மை. ஏனெனில், அவற்றை புதிய இடத்திற்கு அழைத்து செல்ல ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதுகுறித்து செல்லப்பிராணி போக்குவரத்து நிறுவனமான கேரி மை பெட் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஃபைசல் இஸ்லாம் கூறுகையில், மனிதனின் பயணத்தை காட்டிலும் செல்லப்பிராணிகளின் பயணம் அதிக செலவை தரும் என்றும், அவற்றிற்காக விமானம் மற்றும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு அதிக செலவை கொடுக்கும் என கூறியுள்ளார்.
10 இந்தியர்களில் ஆறு பேராவது செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களது செல்ல பிராணிகளுடன் வேறு நாட்டிற்கோ அல்லது பகுதிக்கோ செல்லவோ சிரமத்தை சந்திப்பதாக கூறுகின்றனர். அதற்கு செல்லப்பிராணிகளின் பயணம் குறித்து சிக்கலான நடைமுறைகள் மற்றும் செலவுகள் என காரணமாக கூறப்படுகிறது. பல நிறுவனங்கள் விரிவான ஆவணங்களை கையாண்டு செல்லப்பிராணிகளை இடமாற்றம் செய்யும் பணியை செய்து வருகின்றன. ஆனால், பதிவு செய்வது முதல் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடையும் வரை அனைத்திற்கும் தனித்தனி செலவுகள் ஏற்படுகின்றன.
உள்நாட்டு செல்லப்பிராணி போக்குவரத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 20,000- ரூ.60,000 வரை செலவாகும் என கூறப்படுகிறது. சர்வதேச பயணத்திற்கு ரூ. 2 லட்சத்தில் தொடங்கி ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம்.மனிதர்களை காட்டிலும் விலங்குகளை அழைத்து செல்வதற்கு ஏன் இவ்வளவு செலவாகிறது என்பதையும் ஃபைசல் இஸ்லாம் விளக்கியுள்ளார்.
பயணத்திற்கான IATA- சான்றிதழ் பெற்ற கூண்டுகள்: முதலாவதாக செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல IATA சான்றிதழ் பெற்ற பெட்டிகள் தேவைப்படுகின்றன. உள்நாட்டு அல்லது வெளிநாட்டு இடமாற்றம் எதுவாக இருந்தாலும், செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக இந்த பெட்டிகளில் தான் எடுத்து செல்ல வேண்டும். செல்ல பிராணிகளின் அளவைப் பொறுத்து, ஒரு பெட்டியின் விலை ரூ. 5,000 முதல் 40,000 வரை இருக்கலாம்.
இடமாற்ற ஆவணங்கள், தடுப்பூசி: செல்லப்பிராணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்ய செல்லப்பிராணியின் மருத்துவப் பதிவுகள் மற்றும் தடுப்பூசி விவரங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். சர்வதேச போக்குவரத்து ஆணையில் பல ஆவண நடைமுறைகள் உள்ளன. ரேபிஸ் பரிசோதனை, தடுப்பூசி விவரங்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய சான்றிதழ்கள் பயணத்தின் போது வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதற்கு ஏற்றார்போல் செலவாகும். இதனால் செல்லப்பிராணிகளை இடமாற்றம் செய்யும் நிறுவனங்களே ஆவணங்களை பெறுவதற்கு உதவுகின்றன.
சரியான போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுப்பது: செல்லப்பிராணியை உள்நாட்டிற்குள் சாலை, விமானம், ரயில் வழியாக இடம் மாற்றம் செய்யலாம். ஆனால், பெரும்பாலான நிறுவனங்களின் விருப்பம் விமான போக்குவரத்தாக உள்ளது.விமானத்தில் பயணிப்பது வேகத்தை மட்டும் தாராமல் பாதுகாப்பையும் கொடுக்கிறது. செல்ல பிராணிகளை இடமாற்றம் செய்யும் செலவின் பெரும்பகுதி விமான டிக்கெட்டிற்காக செலவிடப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் செல்லப்பிராணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய அதன் உரிமையாளர்கள் அதிகமாக செலவிட நேரிடுகிறது. ஆனால், அவர்கள் எந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதே அவசியமாகிறது.