

கொரோனா காலகட்டத்தில் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக நிறுவனங்கள் வீட்டிலிருந்து அலுவலகப்பணி செய்ய பரிந்துரைத்தது. ஆரம்பத்தில் இதை அனுபவித்த ஊழியர்களுக்கு நாட்கள் செல்ல செல்ல அலுவலகமே சிறந்தது என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். என்னதான் கம்பெனிகளை திறக்க அரசு அனுமதித்தாலும் இன்னும் சில நிறுவனங்கள் work from home ஐ தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஊழியர்களோ கொரோனா பயத்தைவிட வேலை பளுவால்தான் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதை சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அப்படி நீங்களும் மன அழுத்ததில் இருக்கிறீர்கள் எனில் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில குறிப்புகள் இதோ...


மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் : தொடர் வேலைகள் நிச்சயம் உங்களை மன அழுத்ததில்தான் தள்ளும். எனவே வேலை பளு இருந்தாலும் அவற்றையெல்லம் சில நிமிடங்களுக்கு ஒதுக்கிவிட்டு உங்களுக்கான நேரமாக மட்டும் ஒதுக்குங்கள். அந்த சமயத்தில் வாய் விட்டு சிரிக்கும் காமெடிகளை காணுங்கள், வெளியே சூரிய வெளிச்சம் படும்படி சில நிமிடங்கள் நில்லுங்கள், இயற்கை காற்றை அனுபவியுங்கள். இப்படி பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.


சக ஊழியர்களுடன் தொடர்பு : work from home இல் இருப்பதால் ஊழியர்களுடனான சகஜமான பேச்சை குறைத்துக்கொள்ளாதீர்கள். அவ்வபோது அவர்களுடன் வீடியோ காலில் இணைவது, சாட் செய்வது என இருங்கள். முடிந்தால் நேரடியாக சந்தித்தல், காஃபி ஷாப், லஞ்ச் மீட் என இருங்கள். இதனால் வேலை பளுவிலிருந்து ஆறுதல் கிடைக்கும்.


ஊட்டச்சத்து மிக்க உணவு : வேலை காரணமாக உங்களை கவனிப்பதற்கு மறந்துவிடாதீர்கள். அடிக்கடி தண்ணீர் குடித்து நீரேற்றமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். எண்ணெய் பொருட்கள் , பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள்.


ஸ்கிரீன் டைமை குறைக்கலாம் : நாள் முழுவதும் லேப்டாப்பிலேயே இருப்பதால் திரை நேரத்தை முடிந்தவரை தவிர்ப்பது மனதளவிலும், கண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே திரை அல்லாத விஷயங்களான புத்தகம் வாசிப்பு, குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பது, நண்பர்களுடன் விளையாடுவது என இருக்கலாம். இதனால் ஸ்ட்ரெஸ் ஃபிரீயாக இருக்கலாம்.