

அலுவலகத்தில் எதற்கெடுத்தாலும் புகார், எப்போது பார்த்தாலும் புகார் என இருக்கும் நபர்களை சமாளிப்பது மிகவும் சிரமம். சிலர் இவர்களிடமிருந்து சற்று விலகியும் இருப்பார்கள். இவர்களின் புகார் சிலருக்கு ஆபத்தையும் உண்டாக்கலாம். அதேபோல் தொடர்ந்து புகாரோடு வரும் இந்த நபர்கள் சில நேரத்தில் நம்மை எரிச்சலூட்டக் கூடும். எனவே அவர்களை எப்படி சமாளிப்பது என்று பார்க்கலாம்.


புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் : முதலில் அவர் என்ன புகார் சொல்கிறார் என்பதை விட ஏன் சொல்கிறார் என்கிற காரணத்தை கண்டறியுங்கள். உதாரணத்திற்கு தான் தகுதி படைத்தவனாக இருந்தும் புரமோஷன் கிடைக்கவில்லை என்ற ஆதங்கமாக இருக்கலாம். வேலையில் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தற்காத்துக்கொள்ள இப்படி செய்யலாம். எனவே அது என்ன என்பதை புரிந்துகொண்டு அது குறித்து நேரடியாகவே பேசி அவருக்கு ஆறுதல், சமாதானம் செய்யுங்கள். பின் அடுத்தமுறை குற்றச்சாட்டுடன் வர மாட்டார்.


அவர்களின் மதிப்பை அதிகரித்தல் : அதாவது நான் நேர்மையாக இருக்கிறேர்ன் வேலையில் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கிறேன், ஒருபோதும் நான் நிறுவனத்திற்கு எதிராக தவறு செய்வதில்லை என்பதை உணர்த்துவதற்காகவும் மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி புகார்களை அடிக்கிக் கொண்டிருப்பார்கள். இப்படி இருப்போரிடம் உங்கள் வேலை இதுவல்ல என நேரடியாக சொல்வதே நல்லது. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தால் அடிக்கடி புகாருடன் வருவார்கள்.


மாற்ற முயற்சிக்கலாம் : இப்படி புகார் செய்வதையே வேலையாக வைத்துள்ளாரே என அவரை விட்டு விலகுவதை விட அவருடைய இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறுங்கள். இதனால் சக ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எடுத்துச் சொல்லுங்கள். அவருக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என கேட்டு அவருக்கு ஆலோசனை அளித்து இந்த பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்.


ஈடுபாடு காட்டாதீர்கள் : அடுத்த முறை புகாருடன் வந்தால் ஆர்வமாக கேட்கத் துவங்காதீர்கள். சரி இப்படி இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். அலுவலகம் என்றால் இப்படியெல்லாம் இருப்பது இயல்பு எனவே இதை ஏற்றுக்கொண்டு உங்கள் வேலையை செய்யத் துவங்குங்கள் என்று கூறி அவரின் வேலையை செய்ய மடைமாற்றிவிடுங்கள். நீங்கள் கேட்கத் துவங்கினால் அவர் சொல்லிக்கொண்டேதான் இருப்பார்.


நெருக்கத்தை உருவாக்கும் முயற்சி : சிலர் அலுவலகத்தில் மற்றவர்களுடன் நெருக்கத்தை உருவாக்கவும், நட்பை வளர்த்துக்கொள்ளவும் மற்றவர்களைப் பற்றி புகார் பேசுவதை ஒரு வழியாகப் பின்பற்றுவார்கள். ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட நபர் இல்லை எனில் நேரடியாகவே நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களை பற்றி புகார் சொல்வதை கேட்பதில் எனக்கு ஈடுபாடு இல்லை என நேரடியாக பேசிவிட்டால் அடுத்தமுறை புகாருடன் உங்கள் பக்கமே வர மாட்டார்.