உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே நிலவும் சின்ன கருத்து வேறுபாடுதான் மிகப் பெரிய சண்டைகளுக்கு காரணமாக அமைந்துவிடும். உலகமே அழிந்து விட்டதைப் போலவும், இனி உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இதனால் உங்களை நீங்களே நொந்து கொள்ள வேண்டியிருக்கும்.
தெய்வீகக் காதல் என்பது நிபந்தனையற்றது, அது தூய்மையானது. அது எப்போதுமே நமக்காக காத்திருக்கிறது. அதே போல உலகில் மிக வலுவான ஆயுதம் அன்பு தான். இரு தரப்புக்கும் இடையே அன்பைத் தூண்டுவதற்கு முன்பாக முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், அதற்கு பிறகு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களை நீங்கள் ஏற்றுக் கொண்டு விடுவீர்கள்.
பொறுமை அவசியம் : ஆரோக்கியமான உறவை பேணுவது சற்று சிரமம் மிகுந்த காரியம் தான். அதற்கு நிறைய நேரமும், முயற்சியும் தேவைப்படும். அத்துடன் புரிந்துணர்வு என்பதும் அவசியமானது. உங்கள் பார்ட்னரின் தேவை என்ன, அவர்களது எண்ண ஓட்டம் என்ன, அவர்களது ஆசை என்ன என்பதையெல்லாம் எப்போதும் நாம் தெரிந்து வைத்திருப்பது இயலாத காரியம் தான். அவர்களுக்கு என்ன தேவை என்பதை நாம் புரிந்து வைத்திருப்பதாக நமக்கு, நாமே நினைத்துக் கொண்டிருந்தாலும், கடைசியில் அது தவறாகத்தான் முடியும்.
நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் : தெய்வீகக் காதல் என்பது மனித வாழ்வின் ஒரு அங்கம். சரியான புரிந்துணர்வு மூலமாக அதை ஏற்படுத்திக் கொள்ள முடியும். கருணை என்பது மற்றொருவரின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது உங்களுக்குள் உருவாகும் மாற்றம் ஆகும். நம்மை நாமே புரிந்து கொண்டால் தான், பிறரது உணர்வுகளை புரிந்து கொள்ள நாம் முயற்சிக்க முடியும். தியானம் செய்வது மூலமாகவும், சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுவதன் மூலமாகவும் நம் மன உறுதி மேம்படும்.
கருத்து வேறுபாடுகளுக்கு எது காரணம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் : பலர் தெய்வீகக் காதல் என்பதற்கான அர்த்தம் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். காதல் என்பது எந்தக் குறையுமே இல்லாமல் முழுமை அடைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. உங்கள் தவறுகளை நீங்களே மன்னித்துக் கொள்வது போல, பிறருடைய தவறுகளையும் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்க பிரச்சினையை, உங்கள் வாழ்க்கை துணையை சந்திக்கும் போது, அதன் வலியை புரிந்து கொள்ளும் திறன் உங்களுக்கு இருக்க வேண்டும்.