ஆனால் இந்த உறவில் ஏற்படும் விரிசல் மற்றும் பிரிவு ஒருவரது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக ஒருவர் தன்னோடு உறவில் இருந்தவரை மிகவும் ஆழமாக நேசித்து இருந்தால் அவரை பிரியும் போது மிகுந்த மனவேதனை கொள்வார். பிரிவால் ஏற்படும் அதிக கவலை, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகள் சில மாதங்கள் சில நேரங்களில் ஆண்டுகள் கூட நீடிக்கும். எனவே பிரிவு தரும் துயரத்திலிருந்து மீள ஒருவர் தனது உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் கையாளுவது முக்கியம். ஒருவர் பிரிவை எதிர்கொள்ளும் கடினமான காலங்களில் தனது மனநலத்தை பேண உதவும் வழிகளை இங்கே பார்க்கலாம்.
பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்:பிரிவால் ஏற்படும் சோகத்தை மறக்க முதலில் ஒருவர் தன் மனதை அமைதிப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியமான படி. பார்த்தாலே உற்சாகம் கொள்ளும் நண்பர்கள் அல்லது உறவினர்களை சந்திக்க நேரம் செலவழிக்கலாம். இல்லை என்றால் மிகவும் குதூகலப்படுத்தும் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கொள்ளலாம். இந்த பழக்கம் பிரிவால் ஒருவர் இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்.
எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்: பிரிவால் ஏற்படும் சோக உணர்வுகளுக்கு மத்தியில் பல எதிர்மறை எண்ணங்கள் ஒருவரை ஆட்டி வைக்கும். ஆனால் மனம் போகும் போக்கில் எதிர்மறை எண்ணங்களுக்கு வலு கொடுக்காமல், சோகத்திலிருந்து மீண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல கூடிய நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது அவசியம். ஏனென்றால் நீங்கள் கடந்த காலத்திற்கு சென்று நடந்த எதையும் மாற்ற முடியாது என்பது உணர வேண்டும்.
உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்: உங்கள் பார்ட்னர் உங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருக்கலாம், திடீரென்று அந்த நெருங்கிய உறவு இல்லாமல் போவது நம்பமுடியாத வேதனையாக இருக்கும். எந்த ஒரு பிரிவும் கடினமானது தான் என்பதால் வருத்தப்படுவது என்பது இயல்பானது. மற்ற எல்லா உணர்ச்சிகளையும் போலவே பிரிவால் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது முக்கியம் என்கிறார்கள் நிபுணர்கள். உள்ளுக்குள் எழும் சோக உணர்வுகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைக்காமல் நண்பர்கள் அல்லது நெருக்கமான உறவுகளிடம் வெளிப்படுத்தலாம். தேவைப்பட்டால் தொழில்முறை நிபுணரை தொடர்பு கொள்ளலாம்.
அழுகையை கட்டுப்படுத்த வேண்டாம்..பிரிவில் இருப்பவர்கள் ஒரு நாள் மிகவும் நன்றாக உணர்ந்து அடுத்த நாள் மிகவும் சோகமாக உணர்வார்கள். அழுது விட்டால் தேவலாம் என்று நினைப்பு உள்ளுக்குள் இருக்கும், ஆனால் அதை செய்யாமல் கட்டுப்படுத்தி மேலும் மேலும் மனஅழுத்தத்திற்கு உள்ளாவர்கள். எனவே அழுது தீர்த்து விட்டால் மனது லேசாகிவிடும் என்று நினைத்தால் அழுது விடுங்கள்.
தொடர்ந்து செல்லுங்கள்: பிரிவு என்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் அதோடு ஒருவரது வாழ்க்கை அல்லது உலகம் முடிந்து விட போவதில்லை. தங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் விஷயங்களை நினைத்து கவலைப்படுவதை தவிர்த்து விட்டு, கண் முன்னால் இருக்கும் அற்புத உலகில் தொடர்ந்து முன்னேறி செல்ல நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான உடற்பயிற்சி மற்றும் சீரான டயட்டை பின்பற்றவும் கூறுகிறார்கள்.