நம்மில் பலரின் வீடுகளில் நாய், பூனை போன்று செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் இருக்கலாம். வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தாலே அது மகிழ்ச்சியான ஒன்றாகவும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகவும் இருக்கும். அவை வீடெங்கும் சுற்றி வருவது ஒரு குழந்தை நம் வீட்டில் இருப்பது போன்ற மனநிலையை நமக்கு கொடுக்கும். அப்படி செல்ல பிராணிகள் சுதந்திரமாக சுற்றி தெரியும் போதும், விளையாடிக் கொண்டிருக்கும் போதும் சில நேரங்களில் கவனமின்மையால் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஆபத்து உள்ள இடங்களில் மூடி வைக்க வேண்டும் : வீடுகளில் உள்ள கூர்மையான முனைகளைக் கொண்ட மேசைகள், கட்டிட அமைப்புகள் மற்றும் மின்சார விளக்குகளையும் மூடி வைக்க வேண்டும். ஏனெனில் சில நேரங்களில் நீங்கள் வீட்டில் இருக்கும் அல்லது நீங்கள் இல்லாத சமயங்களிலும் அவை வீட்டை சுற்றி இங்கும் அங்கும் ஓடும்போது கூர்மையான முனைகளில் இடித்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. மேலும் சில செல்லப் பிராணிகள் அறியாமையினால் மின்சார வயர்களை கடித்து விடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இவற்றினால் ஏற்படும் பாதிப்பு மிக தீவிரமாக இருக்கும். இதைத்தவிர மாடி வீடாக இருந்தால் மாடியில் உள்ள தடுப்பு கம்பிகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை மூடி வைப்பது நல்லது. ஏனெனில் அந்த இடைவெளியின் வழியாக உங்கள் செல்லப் பிராணி தவறி கீழே விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மரச்சாமான்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் : செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் அனைவரும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு இருப்பார்கள். முக்கியமாக உங்கள் வீட்டில் நாய்கள் இருந்தால் அவை வீட்டில் உள்ள மர சாமான்களையும், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களையும் கடித்துக் கொண்டிருப்பதும் , அவற்றை கீறிக் கொண்டிருப்பதும் இயல்பாக இருக்கும் ஒரு பிரச்சனை தான். ஆனால் இவ்வாறு செய்வதன் மூலம் பொருட்கள் சேதம் அடைவது மட்டுமின்றி மரச்சாமான்களை கடிப்பதாலும் கீறுவதாலும் செல்ல பிராணிகள் வாயிலோ அல்லது நகங்களிலும் கீறல்கள் ஏற்பட்டு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த காரணத்தினால் மரச்சாமான்கள், துணி மற்றும் தரை விரிப்புகள் ஆகியவற்றை பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது.
செல்லப்பாணிகளுக்கு ஏற்ற வகையில் துணிகளை தேர்வு செய்ய வேண்டும் : வீட்டில் பயன்படுத்துவதற்கு துணிகளை தேர்வு செய்யும் போது செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு மைக்ரோ பைபர், வினைல், நைலான், கான்வாஸ் போன்ற துணி வகைகள் செல்லப்பிராணிகள் கடித்தாலும் கீறினாலும் அதிக அளவு சேதம் அடையாமல் இருக்கும். மேலும் துர்நாற்றம் வராமல் பாதுகாப்பதோடு தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்த துணிகளை மரச்சாமான்கள், மெத்தை விரிப்புகள், மேசைகள் ஆகியவற்றிற்கு நாம் பயன்படுத்தலாம்.
பயிற்சி அளிக்கவேண்டும் : செல்லப் பிராணிகளுக்கு சரியான பயிற்சிகளை அளித்து வளர்ப்பது மிகவும் முக்கியம். அது ஒவ்வொரு முறை ஏதேனும் சரியான செயலை செய்யும்போது அவர்களுக்கு ஏதேனும் வெகுமதி கொடுக்க வேண்டும். இதனால் மீண்டும் மீண்டும் அந்த செயலை செய்து உங்களிடம் வெகுமதி பெற அவர்கள் முயற்சி செய்வார்கள். உதாரணத்திற்கு உங்கள் செல்லப் பிராணி மாரச்சாமான்களை கடித்துக் கொண்டிருக்கிறது என்றால் அவற்றை அங்கிருந்து இழுத்து ஏதேனும் விளையாட்டு சாமானை அதற்கு கொடுக்கலாம். இதை செய்யும் போது கூடவே வெகுமதி அளிப்பதன் மூலம் அடுத்த முறை அதை மரச்சாமான்களை கடித்து குதறுவதை மறந்துவிடும். ஆனால் சில செல்லப்பிராணிகளுக்கு இதனை பழகுவதற்கு சிறிது கால தாமதம் ஆகலாம். இவை தவிர்த்து மேஜை மீது மிளகாய் தூள், மிளகு தூள் அல்லது வினிகர் ஆகியவற்றை போட்டு வைப்பதன் மூலம் அந்த நெடியினால் செல்லப் பிராணிகள் மரச்சாமான்களை நெருங்குவதை தவிர்த்து விடும்.