ஒவ்வொரு நாளும் வெளியில் சென்றுவரும் அனைவருக்கும் மன அமைதியின் புகழிடமாக வீடு மட்டுமே இருக்கிறது. ஷோபாவில் அமர்ந்து சிறிது நேரம் கண்மூடும்போது அன்றைய பொழுதின் களைப்பு இருக்கும் இடம் தெரியாமல் போகும். ஆனால், களைப்புடன் திரும்பும் சிலருக்கு வீட்டில் இருக்கும் சில விஷயங்களை மேலும் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அதனை கண்டுபிடித்து உடனடியாக சரிசெய்துவிட்டால், மன அமைதியை வீடு கொடுக்கும். என்னென்ன விஷயங்களை மன உளைச்சலுக்கு காரணமாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
தவறான இடங்களில் பர்னிச்சர் : வீட்டில் ஒரு சில பொருட்கள் எங்கு இருக்க வேண்டுமோ, அந்த இடத்தில் சரியாக வைத்திருக்க வேண்டும். ஓர் அறையில் தேவைக்கு அதிகமாக பொருட்களை குவித்து வைத்து இருந்தால், தேவையற்ற மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, படுக்கையறையை எடுத்துக்கொண்டால் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு அதன் அமைப்பு இருக்க வேண்டும். தூங்கும் படுக்கை கிழக்கு மற்றும் மேற்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தால், உடனடியாக தூக்கம் வரும். மனது தெளிவாக இருக்கும்.
ஹாலில் இருக்கும் ஷோபாக்களை ஒரு சிலர் சமையலறைக்கு அருகில் வைத்திருப்பதை பார்க்க முடியும். மாலை நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்பியவுடன், நீங்கள் ஷோபாவில் அமரும்போது, வீட்டில் உள்ளவர்கள் சமைத்தால் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனால், அமைதியாக இருக்கும் பகுதியில் ஷோபாக்களை வைப்பது நல்லது. ஒவ்வொரு அறையிலும் குறைவான பொருட்களை வைத்திருந்தால், உலாவுவதற்கு வசதியாக இருக்கும்
ஒளி அமைப்பு : வீட்டில் இருக்கும் லைட் செட்டிங்ஸ் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நல்ல சூரிய ஒளி நீங்கள் இருக்கும் அறைகளில் இருந்தால், அவை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். சூரிய ஒளியானது மூளையில் செரோட்டானின் உற்பத்தியை கொடுக்கும். அதிக பவர் உடைய லைட் மற்றும் கலர்கலரான லைட்டுகள் ஒருவித அசௌகரியமான உணர்வை மனதுக்குள் ஏற்படுத்தும். பிரைட்டாக இருக்கக் கூடிய ஒளி வெளிச்சம் மனதுக்கு இதமான உணர்வை கொடுப்பதுடன், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். நல்ல லைட் செட்டிங்ஸ் மனதுக்குள் நல்ல சிந்தனையை ஏற்படுத்தும். வாசிப்பதை பழக்கம் கொண்டிருந்தால், ஜன்னல் அருகே அமர்வது நல்லது. ஆழ்ந்த வாசிப்புக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
ஒலி எதிரொலிப்பு (Echos) : வீட்டில் ஒலி எதிரொலிப்பு இருந்தால் ஒருவிதமான எரிச்சல் உணர்வை கட்டாயம் ஏற்படுத்தும். ஒருவரை சத்தமாக அழைக்க முடியாது. தொலைபேசி உரையாடல் சரியாக இருக்காது. இதனால் வீட்டில் ஒலி எதிரொலிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு தடிமனான தரைவிரிப்புகள் மற்றும் திரைச்சீலைகளை அமைக்கும்போது ஒலி எதிரொலிப்பு இருக்காது.
வண்ணம் அமைப்பு : வீட்டில் இருக்கும் வண்ண அமைப்பும் மனதுக்கு அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்கள் உங்கள் மனதை அலைப்பாய தூண்டிக்கொண்டே இருக்கும். ப்ளூ, கிரே போன்ற கலர்கள் மனதுக்குள் ஒரு விதமான அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. தரையில் அமைக்கப்பட்டிருக்கும் டைல்ஸ் அல்லது மார்பிள் கலர்கள், சுவற்றில் இருக்கும் வண்ணப்பூச்சு மற்றும் அதற்கேற்ப வீட்டு ஷோபா உள்ளிட்ட பொருட்களை வாங்கி அடுக்கும்போது, பார்ப்பதற்கு கண்களை பறிக்கும் வகையில் இருக்கும். தற்போது, வீட்டை அழகுபடுத்துவதற்கென்று சில டெக்கரேஷன் நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை அணுகினால், உங்களின் எதிர்பார்ப்புக்கு விஞ்சிய அளவில் வீட்டின் உட்கட்டமைப்பு பொலிவு பெறும். அழகான அமைப்புடன் வீடு இருக்கும்போது, மனதுக்குள் மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் தாண்டவமாடும்.