லக்ஸரியான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே ஏசி சாத்தியம் என்ற நிலை மாறி, மிடில் கிளாஸ் வீடுகளிலும் கட்டாய மின்சாதனப் பொருட்களில் ஏசியும் அடங்கியிருக்கிறது. அதிலிருந்து வரும் காற்று வெயில் வெப்பத்தைப் போக்கி நிம்மதியான உறக்கத்தை அளித்தாலும், ஆபத்தும் நிறைந்திருக்கிறது. நம்மை அறியாமலேயே அந்த ஆபத்துகளை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஏசியால்தான் ஏற்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியாது.
உடலின் ஈரப்பதத்தைக் குறைத்துவிடும் : ஏசியால் குளிரூட்டப்பட்ட அறையில் ஏசியானது மொத்த ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். பின் அந்த அறையை குளுமையாகவும், வறட்சியாகவும் மாற்றிவிடும். நீங்களும் குளிர்ந்த காற்று நிறைந்த அறையில் அமரும்போது அதிகமாக தண்ணீர் தாகம் ஏற்படாது என்று நினைப்பீர்கள். ஆனால், உண்மை அதற்கு முரணானது. இதனால் உடலுக்குத் தேவையான நீரும் வற்றி நாட்கள் செல்லச்செல்ல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
தலைவலி : நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட ஏசி ரூமில் அமரும்போது தலைவலி ஏற்படும். இதைப் பலரும் உணர்ந்திருக்கக் கூடும். சிலருக்கு முதல் முறை நீண்ட நேரம் ஏசியில் அமர்ந்தால், அதை உடல் ஏற்றுக்கொள்ளும் வரை தலைவலி வரும். இது உடலின் நீர் வற்றல் காரணமாகவும் நிகழும். ஆனால் இது பலருக்கும் தெரிவதில்லை. கண்டுகொள்ளாமல் கடந்துவிடுகின்றனர். உடலளவில் மட்டுமல்லாமல் அந்த அறையின் சுற்றுச்சூழல் சுத்தமாக இல்லையென்றாலும் அதன் தாக்கம் அதிகரித்து மைக்ரெய்ன் (Migraine) பிரச்னைகள் அதிகரிக்கும்.
வறண்ட சருமம் : ஏற்கனவே சொன்னதுபோல் ரூமின் ஈரப்பதம் முழுவதையும் ஏசி உறிஞ்சிவிடுவதால், சருமத்திற்கும் இயற்கையான ஈரப்பதம் கிடைக்காது. அதேபோல் உடல் நீரும் வற்றிவிடும். சருமம் சுவாசம் பெறவும் வழியில்லை. வறண்ட குளிர்காற்று, சரும ஈரத்தையும் உறிஞ்சிவிடுவதால் பொலிவிழந்த வறண்ட சருமத்தை மட்டுமே பெறுவோம். வறசியால் சருமத்தில் சுருக்கம் , வயதான சரும தோற்றத்தையும் விரைவில் பெற்றுவிடுவோம்.
அலர்ஜி : ஏசி சரியான பராமரிப்பில் இல்லையெனில் அலர்ஜி, தொற்று நோய்கள் பரவும். அதிலிருந்து வெளிவரும் தூசு மற்றும் கிருமிகள் காற்று வெளியேறாத குளிரூட்டப்பட்ட அறையிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். அந்தக் காற்றை உள்ளிழுக்கும் உடலுக்கு, ஆபத்துகளை ஏற்படுத்தலாம். சருமத்திற்கு அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும நோய்களும் வரலாம்.