ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு நேரத்தில், எப்படி அந்த அடுத்த ஆண்டை தொடங்க போகிறோம் என்பதை பற்றி யோசித்து கொண்டு இருப்போம். அதிலும் குறிப்பாக எங்கெல்லாம் சென்று புத்தாண்டை கொண்டாடலாம் என்று சில திட்டங்களை வைத்திருப்போம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் முன்பை போன்று கொண்டாடப்படவில்லை. முன்பெல்லாம் இரவு முழுவதும் சிறப்பான முறையில் ஆடி பாடி எல்லா இடங்களுக்கும் சென்றும் புத்தாண்டை வரவேற்போம்.
ஆனால் தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எனினும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் இந்த புத்தாண்டை சிறப்பான முறையில் கொண்டாடி மகிழாமல் இருந்துவிட முடியுமா? எனவே, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து இந்த புத்தாண்டை வரவேற்க சில வழிகள் உள்ளது. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வீட்டிலே பார்ட்டி : புத்தாண்டு பிறப்பதற்கு முன்னாள் மாலை நேரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். கொண்டாட்டத்தை வீட்டிற்கு வெளியில் சென்று தான் செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. வீட்டிற்குள் இருந்து கொண்டே புது விதமாகவும் கொண்டாடலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உங்கள் அன்புக்குரியவர்கள் ஆகியோரை உங்களது வீட்டிற்கு அழைத்து சில விளையாட்டுகள், கதைகள் மற்றும் பலவற்றை கொண்டு சந்தோஷமாக இந்த புத்தாண்டை வரவேற்கலாம்.
இரவு உணவு : புத்தாண்டிற்கு முந்தைய நாள் இரவை சிறப்பான முறையில் மாற்றிட உங்கள் குடும்பத்தினர் அல்லது அன்புக்குரியவர்களுடன் இதுவரை போகாத பிரபலமான உணவகத்திற்கு சென்று இரவு உணவு உண்ணலாம். உணவகத்திற்கு செல்ல முடியவில்லை என்றாலும், உங்கள் வீட்டிலே அவர்களுக்கு பிடித்த உணவுகளை செய்து பரிமாறலாம். இப்படி செய்வதால் புத்தாண்டை முழுமையான உணர்வுடன் வரவேற்க முடியும்.
கடந்த கால நினைவுகள் : சிறந்த நினைவுகளை அவ்வப்போது நமது மனதுக்குள் அசைப்போட்டு கொள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகவும் உதவும். அந்த வகையில் புத்தாண்டின் முன்னாள் இரவில், கடந்த கால குடும்ப விழாக்களின்போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பார்த்து மகிழலாம். முக்கியமாக இதில் உங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்ற செய்யுங்கள். இது அவர்களுக்கு மனநிறைவான உணர்வை தரக்கூடும். மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி இந்த புத்தாண்டை சிறப்பான முறையில் கொண்டாடுங்கள்.