கோடை வெயிலால் ஏற்படும் இதை போன்ற உடல்நல பாதிப்புகள் நாய்களுக்கு அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்துவதோடு அவற்றுக்கு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை கூட ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் நீங்கள் நாய் வளர்க்கிறீர்கள் என்றால், ஒரு பொறுப்பான செல்லப்பிராணி உரிமையாளராக உங்கள் நாய்க்கு ஏற்பட வாய்ப்பு இருக்கும் பொதுவான கோடைகால சுகாதார சிக்கல்கள் குறித்து விழிப்போடு இருப்பதும், தடுப்பு நடவடிக்கை எடுப்பதும் முக்கியம்.கோடை சீசனில் நாய்களுக்கு ஏற்பட கூடிய சில பொதுவான சுகாதார பிரச்சினைகள் இங்கே..
ஹீட் ஸ்ட்ரோக் : ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஒரு தீவிர மற்றும் அபாயகரமான நிலையாகும். வயதான நாய்கள் மற்றும் சற்று அதிக எடை கொண்ட நாய்களுக்கு கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகம். நாய்களுக்கு ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் என்பது பொதுவாக அதிகப்படியான வெளிப்புற அல்லது சுற்றுச்சூழல் வெப்பத்தின் நீண்ட நேர வெளிப்பாட்டுடன் தொடர்புடையது. ஹீட்ஸ்ட்ரோக்கின் அறிகுறிகளில் மூச்சிரைத்தல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வலிப்பு உள்ளிட்டவை அடங்கும். இதுபோன்ற அசாதாரண சூழலை தடுக்க, உங்கள் நாயை போதுமான நிழல் பகுதியில் இருக்க வைப்பதும், தண்ணீரையும் வழங்குவது அவசியம்.
டிஹைட்ரேஷன்: கோடையில் காணப்படும் அதிக வெப்பம் காரணமாக நாய்கள் நீரிழப்பு அபாயத்தில் இருக்கின்றன. இவற்றுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷன் அதாவது நீரிழப்பு அறிகுறிகளில் ஈறுகள் உலர்ந்து போவது, சோர்வாக அல்லது சோம்பலாக இருப்பது, வழக்கமான பசி இல்லாதது உள்ளிட்டவை அடக்கம். உங்கள் நாய் டிஹைட்ரேட் ஆகாமல் இருக்க அதன் பவுலில் எப்போதும் ஃப்ரெஷ்ஷான தண்ணீர் வைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் நாய் பருகும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க அதன் தண்ணீர் பாத்திரத்தில் ஐஸ் க்யூப்ஸ்களை நீங்கள் சேர்க்கலாம்.
சரும பிரச்சனைகள்: கோடை மாதங்களில் நாய்களுக்கு ஹாட் ஸ்பாட்ஸ், சன்பர்ன் போன்ற பலவித தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். அதே போல கோடை மாதங்களில் உங்கள் நாயை சுத்தமாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். பூச்சிகள் மற்றும் உண்ணிகள் உங்கள் நாயின் உடலில் ஏறி அவற்றை பாதிப்படைய செய்யாமல் தடுக்க உங்கள் கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து பொருட்களை பயன்படுத்தலாம். உங்கள் நாய் வெயிலில் நேரம் செலவிட்டால் அதன் சருமத்தின் சென்சிட்டிவான பகுதிகளுக்கு சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள்.
ஒட்டுண்ணிகள்... கோடை நேரத்தில் கொசுக்கள் மற்றும் உண்ணிகள் மிகவும் ஆக்டிவாக இருக்கின்றன. மேலும் இவற்றால் கோடை காலத்தில் உங்கள் நாய்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட கூடும். எனவே இவற்றால் உங்கள் நாயகளுக்கு ஏதேனும் தீவிர தொற்றுகள் அல்லது நோய்கள் பரவாமல் தடுக்க அவ்வப்போது கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று செக் செய்வதும், தடுப்பு சிகிச்சைகள் குறித்து தெரிந்து வைத்து கொள்ளவும் வேண்டும்.
பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள்: கோடை காலத்தில் கடும் வெயிலில் எப்படி நம்மால் வெறும் காலில் நடக்க முடியாதோ, அதே நிலை தான் நீங்கள் வளர்க்கும் நாய்களுக்கும். சூடான மேற்பரப்புகளில் நடந்தால் அவற்றின் பாதங்களும் பாதிக்கப்படும். சூடான நடைபாதைகள், மணல் மற்றும் கான்கிரீட் உள்ளிட்டவற்றில் வெயில் நேரத்தில் உங்கள் நாயை நடக்க வைப்பது அல்லது அது நடப்பது அவற்றின் மென்மையான பாதங்களில் தீக்காயங்கள் மற்றும் கொப்பளங்களை ஏற்படுத்தும். எனவே வெயில் அதிகம் இருக்கும் போது உங்கள் நாய் சூடான இடங்களில் நடக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள். ஒருவேளை சூடான மேற்பரப்புகளில் உங்கள் நாயை நீங்கள் நடக்க வைக்க வேண்டும் என்றால், அவற்றுக்கு Protective Paw Wax அல்லது Booties-களை பயன்படுத்துங்கள்.
சன்பர்ன் : மனிதர்களை போலவே, நாய்களும் சன்பர்ன்-னால் பாதிக்கப்படலாம், குறிப்பாக மூக்கு, காதுகள் மற்றும் வயிறு போன்ற குறைந்த முடி மற்றும் பிக்மென்டேஷன் உள்ள பகுதிகளில் இவற்றுக்கு சன்பர்ன் பாதிப்பு ஏற்படலாம். சன்பர்ன் பிரச்சனை உங்கள் நாய்க்கு ஏற்படாமல் தடுக்க அவற்றை நேரடி சூரிய ஒளியில் வெளிப்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும், பெட்-சேஃப் சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள், அவை போதுமான நிழல் பகுதியில் இருப்பதை உறுதி செய்யவும்.