

ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குடிநீரின் முக்கியத்துவத்தையும், அதனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உலகளாவிய தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது, உலக தண்ணீர் நாளின் முக்கிய நோக்கமாகும். 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய ஐ.நா சபையால் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக நீர் நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், உலக அளவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வெப்பநிலை உயர்வு ஆகியவை கூறப்படுகிறது. நகரமயமாக்கல் மற்றும் தொழிற்துறை பெருக்கம் காரணமாகவும் நீர்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் தரவுகளின்படி, 3 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கின்றனர். 2050ம் ஆண்டில் 5.7 பில்லியன் மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதமாவது கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள் என்றும் எச்சரிக்கிறது.


தற்போதைய சூழலில் பல நகரங்கள் உலகளவில் பூஜ்ஜிய குடிநீர் என்ற நிலையை எட்டியுள்ளன. அப்பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பரிதாபத்துடன் அல்லாடி வருகின்றனர். இத்தகைய சூழல்களை மாற்ற வேண்டும் என்றால், சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஒவ்வொரு குடிமகனும் தண்ணீர் சேமிப்பில் ஈடுபட வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வு அடைய வேண்டும்.


முறையாக தண்ணீர் சேமிப்பில் ஈடுபட்டால், உலகளவில் ஆண்டொன்றுக்கு 3, 60,000 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற முடியும் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இயற்கையில் பெரும் கொடையான தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? என்பதை இங்கு பார்க்கலாம்.


தண்ணீரை வீணாக்க வேண்டாம் : தண்ணீர் குழாய்களை திறந்துவிட்டப்படியே பலரும் பற்களைக் துலக்குகின்றனர். அவ்வாறு செய்யாமல், பற்களை துலக்கிய பிறகு போதுமான தண்ணீரை வாலி ஒன்றில் எடுத்து சுத்தம் செய்யலாம். இதேபோல், ஷேவிங் செய்யும்போது, பாத்திரங்களை கழுவும்போது தண்ணீரை வீணாக செலவு செய்வதை தவிர்க்கலாம்.


ஷவரில் குளிப்பதை தவிர்த்தல் : பெரிய வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் ஷவர் நீரில் குளிப்பதை தவிர்த்துவிட்டு வாளிகளை பயன்படுத்தி குளிக்கலாம். ஷவரில் குளிக்கும்போது ஒரு நிமிடத்துக்கு 5 கலன் தண்ணீர் வீணாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. வாளியில் எடுத்து குளிக்கும்போது தேவையான தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்துவோம்.


மழை நீர் சேகரிப்பு : காடழிப்பு காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், பொழிய வேண்டிய மழைப்பொழிவின் அளவு குறைந்து, மழையின்மையை அதிகளவு எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனைத் தவிர்க்க மழைபொழியும் காலங்களில் மழை நீரை சேகரித்து குளித்தல், வீட்டு உபயோகம் மற்றும் செடிகளுக்கு பயன்படுத்தலாம். மழை நீர் சேகரிப்பில் ஈடுபடுவதன் மூலம் நிலத்தடி நீர் வளமும் பெருகும். மேலும், தண்ணீர் மறு சுழற்சியை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம். வீணாகும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து அல்லு மறுசுழற்சி செய்து மற்றொரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தலாம்.