நம்மில் பலரது வீட்டில் ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் மீந்து விட்டால் நிச்சயம் மீண்டும் ஒருமுறை அல்லது பலமுறை அது தீரும் வரை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. சிப்ஸ், பக்கோடா, பொரியல் அல்லது ஸ்னாக்ஸ் என எதற்காக பயன்படுத்தப்பட்ட எண்ணெயாக இருந்தாலும் மீண்டும் அதை பயன்படுத்துகிறோம். பொதுவாக நமக்கு பல காலமாக உள்ள கேள்வி ஒருமுறை சமைத்த எண்ணெயை மறுமுறை பயன்படுத்தலாமா அல்லது கூடாதா என்பது. இதற்கு பெரும்பாலான நிபுணர்களின்பதில் கூடாது என்பது தான்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உணவுகளை தயாரிப்பது தேவையற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். மீதமுள்ள சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தினால் மற்றொரு உணவைத் தயாரிக்க பயன்படுத்த முடியாது. அதற்காக காசு கொடுத்து வாங்கிய சமையல் எண்ணெயை குப்பையிலா கொட்ட முடியும்.?
ஒருமுறை பயன்படுத்திய ஆயிலை மீண்டும் பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், அதனை வெவ்வேறு வழிகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெயை லூப்ரிகன்ட் ஆயிலாக (lubricant Oil) பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவது உங்கள் வீட்டில் இருக்கும் பல்வேறு பொருட்களை உயவூட்டுவதற்கு அதாவது உராய்வை அகற்ற அல்லது (lubricating) அல்லது சரி செய்ய உதவும்.
பழைய பூட்டுகளை சரி செய்வது : உங்கள் வீட்டில் உள்ள கதவின் பழைய பூட்டுகள் மிகவும் டைட்டாக இருந்தால், மீதமுள்ள சமையல் எண்ணெயைப் பயன்படுத்தி மீண்டும் அதை சாஃப்ட்டாக்கி சிரமமின்றி பயன்படுத்த முடியும். ஒரு பாட்டிலில் எண்ணெயை நிரப்பி, பின் பூட்டுக்குள் வைக்க ஒரு டிராப்பரை (dropper) பயன்படுத்தவும். பூட்டு திறக்கும் இடத்தில் டிராப்பரை சொருகி பாட்டிலில் இருக்கும் எண்ணெயை ஊற்றவும். பின் பூட்டை ஓரிரு முறை பூட்டி திறக்க முயற்சிக்கவும். இதனால் பூட்டில் உள்ள அனைத்து ஸ்குருக்கள் மற்றும் சங்கிலிகள் நன்கு லூப்ரிகேட்டாகின்றன. ஓரிரு முறை பயன்படுத்திய பிறகு, உங்கள் பூட்டு அதன் பின்னர் நன்றாக செயல்படும்.
மர பர்னிச்சர்களை பொலிவூட்ட : உங்கள் வீட்டில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மர பர்னிச்சர்கள் அதன் பொலிவு மற்றும் பிரகாசத்தை இழந்து காணப்படும். இதனை சரி செய்ய பணத்தை செலவழிக்க தேவையில்லை. பர்னிச்சர்களை மெருகேற்ற மீதமுள்ள எண்ணெயை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கொண்டு,ஒரு மைக்ரோ ஃபைபர் துணியை எடுத்து அதை லேசாக எண்ணெயில் நனைத்து, உங்கள் மர பர்னிச்சர்கள் அனைத்தையும் துடைத்து மெருகூட்டுங்கள். மர பர்னிச்சர்களின் பிரகாசத்தை பராமரிக்க ஒவ்வொரு மாதமும் இதை செய்யலாம்.
பெயிண்ட் கறையை நீக்க : சமையல் செய்தது போக மீதமுள்ள எண்ணெயை பயன்படுத்தி உங்கள் சருமம் அல்லது வீட்டில் ஒட்டியிருக்கும் பெயிண்ட் கறைகளை போக்கலாம். சுவர்களுக்கு வண்ணம் பூசும்போது, தரையில் கசிவுகள் அல்லது கறைகள் இருப்பது, கதவுகள், ஜன்னல்கள் அல்லது உடலில் பெயிண்ட் கறைகள் இருப்பது பொதுவானது. இந்த கறைகளை அகற்ற எண்ணெயை முயற்சிகலாம். இது கறைகளை சீராக அகற்றும்.
கார் கிளீனர் : உங்கள் கார் எப்போதும் புதியது போல இருக்க விரும்பினால் அதற்காக நீங்கள் பராமரிப்பில் அதிகம் முதலீடு செய்ய தேவையில்லை. அதற்கு பதில் மீதமுள்ள சமையல் எண்ணெயின் உதவியால் உங்கள் காரை புதியது போல தோற்றமளிக்க செய்யலாம். எந்தவொரு அழுக்கு, கறை இருப்பினும் அந்த பகுதியை எண்ணெயால் தேய்த்து எளிதில் அகற்றலாம். எண்ணெயால் காரை துடைக்க மென்மையான காட்டன் துணியை பயன்படுத்துங்கள். காரில் கீறல்கள் இருந்தால் அதை எண்ணெய் சரி செய்யாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
லெதர் பாலிஷ் : உங்கள் விலையுயர்ந்த லெதர் ஜாக்கெட், கைப்பை அல்லது பர்னிச்சர் என எதுவாக இருந்தாலும், மீதமுள்ள சமையல் எண்ணெய் ஒவ்வொரு லெதர் பகுதிகளையும் ஒளிர உதவும். எனவே ஒரு மென்மையான காட்டன் துணியை எண்ணெயில் நனைத்து, உங்களிடம் உள்ள லெதர் பொருட்களின் மேல் மெதுவாக தேய்ப்பதால் அதன் பிரகாசம் திரும்பி வருவதோடு மட்டுமல்லாமல், அந்த பொருளும் பாதுகாப்பாக இருக்கும்.