எல்லா பொருட்களையும் வாங்கும் முன்பு யோசிக்கும் நாம், சீலிங் பேன் வாங்குவதற்கு போதுமான அக்கறை காட்டுவதில்லை. குறைந்தப்பட்சம் எந்த நிறுவனத்தின் பேனை வாங்கலாம் என்றுகூட யோசிப்பதில்லை. விலையின் அடிப்படையில் மட்டுமே பெரும்பாலானோர் சீலிங் பேன்களை தேர்ந்தெடுக்கின்றனர். லைட்டுகள், அதன் நிறத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சீலிங் பேனை தேர்ந்தெடுக்கும்போது காட்டுகிறோமா? என்பதை ஒருமுறை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பெரும்பாலானோர் இல்லை என்று தான் கூறுவார்கள்.
1. எந்தளவுள்ள மின்விசிறியை வாங்கலாம்? : அறையின் அளவுக்கு ஏற்ப மின் விசிறியின் அளவை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே மாதிரியான மின் விசிறியை அனைத்து அறைகளுக்கும் தேர்ந்தெடுக்கக்கூடாது. பெரிய அறையில் சிறிய ஃபேனை மாட்டினால் குறைவான காற்றையும், சிறிய அறையில் பெரிய பேனை மாட்டினால் அதிகமான காற்றையும் கொடுக்கும். இரண்டுமே பொருத்தமில்லாதது. பொதுவாக, 75 சதுர அடி பரப்பளவுள்ள அறைக்கு 36 இன்ச் ஃபேன், 100 சதுர அடி அறைக்கு 42 இன்ச் ஃபேன், 225 சதுர அடி உள்ள அறைக்கு 52 இன்ச் அளவுள்ள பேன்களை மாட்டினால் மட்டுமே பொருத்தமாக இருக்கும். அறை பெரியதாக இருந்தால் ஒன்றக்கு பதிலாக இரண்டு மின் விசிறிகளை மாட்டிக்கொள்ளுங்கள்.
2. எவ்வளவு உயரத்தில் மின்விசிறியை தொங்கவிட வேண்டும்? : போதுமான காற்று கிடைக்க தரையில் இருந்து 8 முதல் 9 அடி உயரத்தில் இருக்குமாறு ஃபேன் தொங்கவிட வேண்டும். ஹக்கர் (Hugger) ஃபேன்கள் குறைவான உயரம் உள்ள அறைகளுக்கு பொருத்தமாக இருக்கும். குறைந்தபட்சம் 8 அடி உயரமுள்ள அறைகளுக்கு இந்த ஃபேனை பயன்படுத்தலாம். உயரம் கூடுதலாக இருக்கும்போது, விசிறியை தொங்கவிடப்படும் கம்பியை நீளத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அறையின் மேற்பகுதிக்கும், விசிறிக்கும் அதிக இடைவெளி இருந்தால் காற்றின் சுழற்சி நன்றாக இருக்கும். அறையின் அளவுக்கு ஏற்ப ஃபேனின் உயரத்தை நிர்ணயிக்கவில்லை என்றால் காற்று போதுமானதாக இல்லாமல் போக வாய்ப்புள்ளது. சரியான அளவில் ஃபிட் செய்தால் குளிர்ச்சியான காற்று கிடைக்கும்.
3. விசிறியின் இறக்கைகள் எத்தனை இருக்கலாம்? : விசிறியின் இறக்கைகளுக்கு ஏற்ப ஃபேனின் செயல்பாடு வேறுபடும். மூன்று , நான்கு, ஐந்து பிளேடுகள் கொண்ட இறக்கைகள் கூட இருக்கின்றன. ஆனால், சரியான வடிவமைப்பு மற்றும் காற்றின் சுழற்சிக்கு மூன்று பிளேடுகள் உடைய ஃபேன்கள் சிறந்தது. அதிக பிளேடுகள் இருந்தாலும், ஃபேனின் அமைப்பு எப்படி இருக்கிறதோ? அதற்கேற்ற ரிசல்ட் மட்டுமே கிடைக்கும். அதிக பிளேடுகள், அதிக விலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. பிளேட்கள் ஏதேனும் வித்தியாசத்தை ஏற்படுத்துமா? : பிளேடுகள் எஃகு, அலுமினியம், பி.வி.சி என பல்வேறு வகைகளில் உள்ளது. எந்த வகை பிளேடாக இருந்தாலும் ஒரே மாதிரியான ரிசல்ட் மட்டுமே கிடைக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், பிளேடுகளின் தரம். நல்ல லைஃப் கொடுக்கும் பிளேடுகள் உள்ள ஃபேனை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.
5. மோட்டார் எவ்வளவு முக்கியம்? : ஃபேன் வாங்குவதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, அந்த பேனின் மோட்டார். தரமான மோட்டார் உடைய ஃபேன் என்பதை உறுதி செய்து வாங்குவது சிறந்தது. இல்லையென்றால், போதுமான காற்றைக் கொடுக்காமல்போக வாய்ப்புள்ளது. டிசி மோட்டார்களை உடைய ஃபேன்கள் சிறந்தது. சாதாரண மோட்டார்களை விட 70 விழுக்காடு அதிக செயல்திறன் உடையவை. முக்கியமாக, மோட்டார்களில் சத்தம் எழாது.