முன்பெல்லாம் தோட்டத்திற்குள் வீடு இருக்கும், எங்கு பார்த்தாலும் பசுமை, ஜன்னலை திறந்தாலே சிலுசிலுவென காத்து என வாழ்க்கையை இயற்கையோடு இணைந்து வாழும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது அடுக்குமாடி கலாச்சாரம் தான். சிங்கிள் அல்லது 2 பெட்ரூம் பிளாட்டுக்குள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. தனி வீடு கட்டினாலும் ஒரு தென்னை மரம் வைக்கும் அளவிற்கு கூட இடம் விடுவது கிடையாது.
வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் பசுமையை சேர்ப்பதன் மூலம் அதன் லுக்கையே நீங்கள் செம்ம ஸ்டைலிஷாக மாற்ற முடியும். வீட்டின் ஹால், கிச்சன், பால்கனி என கிடைக்கும் இடத்தில் எல்லாம் நிழலில் வளரக்கூடிய, அதே சமயம் காற்றையும் சுத்தப்படுத்தக்கூடிய செடி, கொடிகளை வளர்ப்பதன் மூலமாக ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கலாம். இருக்குற பிசி ஷெட்டியூலில் வீட்டிற்குள் செடி வளர்ப்பதா? யாருங்க அதையெல்லாம் மெயின்டன் பண்றது.. ரொம்ப கஷ்டம் என யோசிக்க வேண்டாம். அதற்கான எளிமையான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
டேபிள் டாப் செடிகள்: கொரோனா பெருந்தொற்று காரணமாக வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் ஆன்லைன் கல்வி அதிகரித்துவிட்டது. எனவே பலரும் வீட்டில் கண்டிபாக ஒரு மேஜை வைத்திருப்போம், அதன் மீது டேபிள் டாப் செடிகளை வைத்து பராமரிக்கலாம். சின்கோனியம், கோல்டன் பொத்தோஸ், குளோரோஃபைட்டம் ஆகிய செடிகள் டேபிள் மீது வைத்து வளர்க்க ஏதுவானவை.
இண்டோர் பிளான்ட்ஸ்: வீட்டிற்குள் கிடைக்க கூடிய குறைவான சூரிய ஒளி மற்றும் காற்றைக் கொண்டு ஆரோக்கியமாக வளரக்கூடிய தாவரங்களை இண்டோர் பிளான்ட்ஸ் என அழைக்கிறோம். வீட்டிற்குள் தாவரங்களை வைத்து வளர்ப்பது, பசுமையை சேர்ப்பதோடு, வெளியே இருந்து வரும் அசுத்தமான காற்றை வடிகட்டி, சுத்தமான காற்றாக கொடுக்கிறது. மேலும் இது மனத்திற்கு அமைதியையும், புத்துணர்வும் கொடுக்கிறது. லில்லி, அந்தூரியம், டில்லான்சியா ஐயோனந்தா, ட்கசேனா ரிஃபெக்ஸா, ஓபன்டியா மைக்ரோடாசிஸ், சாக்லன்ஸ் போன்ற தாவரங்கள் வீட்டிற்கு உள்புறம் வளர்க்க ஏற்றது.
அலமாரிகளில் அழகு தாவரங்கள்: ‘வீட்டிற்குள் செடி வளர்க்க ஆசை தான், ஆனால் என்ன செய்ய இடவசதி இல்லையே’ என இனி கவலைப்படாதீர்கள். சிறிய வகை தாவரங்களை வளர்ப்பதற்கு ஏற்றார் போல் நிறைய அலமாரிகள் தற்போது விற்பனையாகின்றன. பல வண்ணங்கள், வித்தியாசமான தோற்றங்களில் கிடைக்கும் அவற்றை வாங்கி, அதற்கு ஏற்றார் போல் குட்டி, குட்டி இண்டோர் பிளான்ட்களை வளர்த்து அழகாக்கலாம்.