தற்போதைய காலக்கட்டத்தில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளை பார்ப்பது மிகமிக அரிதான ஒன்றாகும். மேலும் ஃப்ரிட்ஜ் என்பது அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. அப்படி இருக்கையில் பல பேர் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் முதல் மீதமிருக்கும் உணவுகள் வரை அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைக்கின்றனர். சில சமயங்களில் வாரக்கணக்கில் வைத்து பயன்படுத்துகின்றனர்.
ஃப்ரிட்ஜில் உள்ள குறைந்த வெப்பநிலை சில நேரங்களில் உணவுகளில் உள்ள நன்மை தரும் சத்துக்களை அழித்து, நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றி விடுகின்றன. அதுமட்டுமின்றி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்திருக்கும் உணவுகளை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும், ஏனென்றால் நாட்கள் செல்லச்செல்ல விஷத்தன்மை நிறைந்ததாக மாறும் அபாயம் உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஃப்ரிட்ஜுக்குள் சில பொருட்களை வைக்கவே கூடாது என்று பலருக்கும் தெரிவதில்லை. சில பொருட்களை ஃப்ரிட்ஜினுள் வைக்காமல் வெளியே வைத்து உபயோகிப்பதே நல்லது. அப்படி இல்லையெனில் அது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பதாக மாறக் கூடும். அது என்னென்ன பொருட்கள் என்பதை இப்பதிவில் காணலாம்.
வெங்காயம் : வேங்காயத்தை ஃப்ரிட்ஜினுள் வைப்பதை அரவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஈரப்பதம் வெங்காயத்தில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். வெங்காயத்தை வெளியில் தான் வைக்கவேண்டும். ஆனால் உருளைக்கிழங்குக்கு அருகில் வைக்கக் கூடாது. நறுக்கிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜினுள் வைக்கலாம் ஆனால் ஓரிரு நாட்களில் பயன்படுத்தி விடுவது நல்லது.
வெள்ளரிக்காய் : பெரும்பாலானோர் ஃப்ரெஷாக இருக்க வேண்டுமென்று வெள்ளரிகாயை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகின்றனர். குறிப்பாக நறுக்கிய வெள்ளரிக்காயை வைப்பதனால் வெள்ளரிக்காயில் உள்ள நீரினால் மொறுமொறுப்பு தன்மை நீங்கி தொய்வாகிவிடும். மேலும் வெள்ளரியில் உள்ள விதைகள் விழுந்து ஓட்டைகள் விழ ஆரம்பிக்கும். இவ்வாறு இருக்கையில் சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. இருந்தும் ஃப்ரிட்ஜினுள் வைக்க விரும்பினால், ஈரம் புகாத பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கலாம்.
காபித் தூள் : ஃப்ரிட்ஜிலிருந்து வரும் மணத்தைப்போக்க ஒன்றிரண்டு காபிக் கொட்டைகளை உபயோகிக்கலாம். ஆனால் நாம் அருந்துவதற்காக பயன்படுத்தப் படும் காபித் தூளை வைக்கக்கூடாது. ஏனெனில் இதன் உண்மையான சுவை மற்றும் மணம் நீங்கிவிடும். மேலும் காபிக்கு அருகில் இருக்கும் பொருட்களின் மணத்தை எடுத்துக்கக்கூடிய பண்பு இருப்பதனால் காபியின் உண்மையான மணம் மாறும் வாய்ப்பு அதிகம். எனவே, அவற்றை அறை வெப்பநிலையில் ஒரு ஏர் டைட் கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்.