சமையல் எரிவாயு எவ்வளவு முக்கியம் என்பது அனைத்து இல்லத்தரசிகளுக்கு தெரியும். வீட்டில் சமைப்பது முதல் ஹோட்டல்களில் சமைப்பது வரை சமையல் எரிவாயு இன்றியமையாதது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிப்பதை போல, இதன் விலையும் மாதம் மாதம் அதிகமாகி கொண்டே வருகிறது. கேஸ் சிலிண்டரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்தினாலும், சீக்கிரமே கேஸ் தீர்ந்துவிடும். கேஸ் விரைவில் தீர்ந்து போகாமல் சேமிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாத்திரங்களை அடுப்பில் வைக்கும் முன், பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். நம்மில் பலர், பாத்திரத்தை கழுவியதும் அதை அப்படியே கொண்டு போய் அடுப்பில் வைப்போம். இப்படி செய்வதால் கேஸ் சீக்கிரம் தீர்ந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், பாத்திரத்தில் ஈரம் இருந்தால் பாத்திரம் சூடாக நேரம் எடுக்கும். எனவே, பாத்திரத்திற் அடுப்பில் வைக்கும் முன் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
நீண்ட நாட்களுக்கு கேஸ் வர, கேஸ் பர்னரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பர்னரை சர்வீஸ் செய்ய வேண்டும். பர்னர் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதை கேஸ் ஸ்டவ் ஃப்ளேமின் நிறத்தைப் பார்த்தாலே கண்டு பிடிக்கலாம். நெருப்பின் நிறம் சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக இருந்தால் பர்னரில் சிக்கல் இருப்பதாக அர்த்தம். பர்னரை உடனடியாக சுத்தம் செய்யவும்.