”வரவு எட்டணா, செலவு பத்து அணா, அதிகம் ரெண்டணா, கடைசியில் துண்டனா, துண்டனா’’ என்பது தமிழ் சினிமாவின் பழங்கால பாடல் என்றாலும், எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற பாடலாகும். அன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையினர் வரையிலும் வரவுக்கும், செலவுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை சரி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
முன்பெல்லாம் வீடு, ஆடை, உணவும், மருத்துவம் என அத்தியாவசிய செலவுகளை மட்டுமே மக்கள் செய்து வந்தனர். இப்போது, நம் சௌகரியகங்களுக்காக ஆடம்பரமான செலவுகள் பலவற்றை நாம் தொடங்கி விட்டோம். உதாரணத்திற்கு டாக்ஸி சேவை, வாரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை ரெஸ்டாரண்ட் உணவு, குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு படையெடுப்பது என அத்தியாவசியத்தை தாண்டிய செலவுகள் அதிகம்.
இது மட்டுமல்லாமல் வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற சிரமங்களை சந்திக்கும் போது நாம் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். நம் சிரமங்களுக்கு கிரெடிட் கார்டு கை கொடுக்கும் என்றாலும், அதுவும் எல்லை மீறிச் செல்லும்போது நாம் தவிப்புக்கு உள்ளாகிறோம். ஆகவே, பணத்தை சேமித்து முறையாக செலவிடுவது அவசியமானது. அதற்கு ஆகச் சிறந்த வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.