நாம் குடியிருக்கும் வீட்டையும், நம்முடைய அறையையும் சுத்தமாகவும் வாசனையுடனும் வைத்திருக்க அனைவரும் விரும்புவார்கள். அதற்காக பலரும் பலவித முறைகளைப் பின்பற்றினாலும், வாசனை மெழுகுவத்திகளை ஏற்றுவது பலருக்கு மிகவும் பிடித்ததாக உள்ளது. வாசனை மெழுகுவத்திகளை அறையில் ஏற்றுவதால் அறையின் சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதாகவும், மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
உண்மையிலேயே வெண்ணிலா, லாவண்டர் போன்ற வாசனைகள் நம்மை அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக இருக்க உதவு உதவுகிறது. மேலும் அறையில் வாசனை மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருக்கும் போது அதை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாகவும் அறைக்கு அழகு சேர்ப்பதாகவும் உள்ளது. பல்வேறு வித வாசனை மெழுகுவர்த்திகள் சந்தையில் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த வாசனைகளுடைய மெழுகுவர்த்தியை வாங்கி பயன்படுத்துகின்றனர். பலரும் வாசனை மலர்கள் மற்றும் வாசனை மரங்களினால் செய்யப்பட்ட மெழுகுவத்திகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வாசனை மெழுகுவத்திகளை நாம் அறையில் பல்வேறு இடங்களில் ஏற்றி வைக்க முடியும். டைனிங் டேபிள் முதல் புத்தகம் படிக்கும் டேபிள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவற்றை நாம் ஏற்றி வைத்துக் கொள்ளலாம். படுக்கை அறையில் மெழுகுவர்த்தி ஏற்றுவது மிக ரம்மியமான ஒரு சூழலை உண்டாக்குவதாக பலர் கூறுகின்றனர். வாசனை மெழுகுவத்திகளை ஏற்றுவதால் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அவை நம் வீட்டில் மற்றும் அறையில் உள்ள காற்றின் தரத்தை மேம்படுத்துகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். அதற்கு பதிலாக அவை சில நேரங்களில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
வாசனை மெழுகுவத்திகளும் காற்றின் தரமும் : வாசனை மெழுகுவர்த்திகள் நல்ல மனநிலையை கொடுத்தாலும் அவற்றினால் காற்றின் தரம் பாதிக்கப்படும் என சில வல்லுநர்கள் கூறுகின்றனர். வாசனை மெழுகுவத்திகளை குறைந்த அளவில் ஏற்றும் போது எந்தவித பிரச்சனையும் உண்டாவதில்லை. ஆனால் நாம் என்ன விதமான மெழுகுவர்த்தி பயன்படுத்துகிறோம் என்பதும், எந்த அளவிற்கு அவற்றை பயன்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்து காற்றின் தரமானது மாறுபடும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது சந்தையில் கிடைக்கும் பல்வேறு வாசனை மெழுகுவத்திகளும் வேதிப்பொருட்கள் கலந்து, காற்றின் தரத்தை மாசப்படுத்தும் வகையில் தான் உருவாக்கப்படுகின்றன. நீங்கள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவில்லை என்றாலும், கூட அதன் வேதிபொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடும். வேதிப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் வாசனை பொருட்கள் எப்போதுமே உடலுக்கு ஆரோக்கியமானவை அல்ல. இவற்றினால் உடல் நலனுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
வாசனை மெழுகுவத்திகளை ஏற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை : வாசனை மெழுகுவத்திகளை பயன்படுத்தும் போது அதிக தரமுடைய, இயற்கையான வாசனைகள் நிறைந்த மெழுகுவத்திகளை பயன்படுத்த வேண்டும். இவை நல்ல வாசனையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நம் மனதையும் அமைதியாக வைக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல் மெழுகுவத்தியில் உடலுக்கு கெடுதல் தரக்கூடிய வேதிப்பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பீஸ்வேக்ஸ் மெழுகுவர்த்திகள் காற்றில் எதிர்மறை பயன்களை விடுவித்து காற்றை சுத்தப்படுத்த உதவுகின்றன. இது காற்றில் உள்ள நச்சுக்கள் மற்றும் மாசுக்களை நீக்கி அந்த சுற்றுச்சூழலை சுத்தமாகவும் காற்றின் தரத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.