நமது சுற்று புறத்தில் நாளுக்கு நாள் அதிக மாசுபாடுகள் உருவாகி வருகிறது. இதை ஓரளவு சரிசெய்ய கூடிய தன்மை மரங்களுக்கு உள்ளது என்று சொல்வார்கள். இதனால் பலரும் வீடுகளில் கூட சிறு சிறு வீட்டு தாவரங்களை வளர்க்க செய்வார்கள். உண்மையில் இந்த வீட்டு தாவரங்கள் நம்மை சுற்றி உள்ள மாசுபாடுகளை குறைக்குமா அல்லது நமக்கு சுத்தமான காற்றை தருமா என்பது பற்றி பலரும் அறிந்திருப்பது இல்லை. இது குறித்த பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உண்மையில் வீட்டு தாவரங்கள் காற்றை சுத்தம் செய்யுமா இல்லையா என்பதை பற்றி ஆய்வுகளின் முடிவுகளுடன் தெரிந்து கொள்வோம்.
வீட்டு தாவரங்கள் : பொதுவாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிறிய தாவரங்கள் அல்லது வீட்டு தாவரங்கள் இருப்பதற்கான மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால், அவை வெளி மண்டலத்தில் உள்ள காற்றை சுத்தப்படுத்துவதாக நம்பப்படுகிறது. வீட்டு தாவரங்கள் அந்த இடத்தின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் என்ற கூற்றில் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. 1989 ஆம் ஆண்டில், நாசா விஞ்ஞானி பில் வால்வெர்ட்டனால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வீட்டு தாவாரங்கள் காற்று மாசுவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காலப்போக்கில் இதை தொடர்ந்து வந்த ஆய்வுக் கட்டுரைகள் மேலும் சில முடிவுகளை தந்தன. உதாரணமாக, 2019 ஆம் ஆண்டில், பென்சில்வேனியாவின் ட்ரெக்சல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, உட்புறத்தில் உள்ள காற்றை சுத்தம் செய்ய கூடிய வீட்டு தாவரங்கள் பற்றிய அனைத்து கூற்றுகளையும் மறுக்கும் ஒரு ஆய்வை வெளியிட்டனர். இந்த சோதனைகள் அனைத்தும் ஒரு ஆய்வகத்தில் சீல் செய்யப்பட்ட அறைகளில் நடத்தப்பட்டன. சீல் செய்யப்பட்ட அறையை விட ஒரு கட்டிடத்தில் காற்று பரிமாற்றத்தின் நிலையான விகிதம் மிக வேகமாக இருக்கும் என்று அவர்கள் வாதிட்டனர். இதனால் நிஜ காரணிகளை கருத்தில் கொண்டால், VOC எனப்படும் வொலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட் அளவு தவறாக வருகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், ராயல் தோட்டக்கலை சங்கத்துடன் இணைந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் மற்றொரு ஆய்வு வெளிவந்தது. காற்று மாசுபடுத்த கூடிய காரணிகளில் ஒன்றான நைட்ரஜன் வெளிப்படும் போது பொதுவான வீட்டு தாவரங்கள் அந்த வாயுவை 20 சதவிகிதம் குறைக்கின்றன. என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மற்றொரு ஆய்வு, உட்புறக் காற்றில் இருந்து காற்று மாசுபாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதைக் காண, தாவரங்கள் அடங்கிய முழு சுவர் தேவைப்படலாம் என்று கூறுகிறது.
அதன்படி, வீட்டு தாவரங்களை தொட்டிகளில் வளர்க்க கூடாது என்பதை இது குறிக்கவில்லை. இந்த வீட்டு தாவரங்கள் காற்றைச் சுத்திகரிப்பு செய்வதை தவிர்த்தும், பல கூடுதல் நன்மைகளையும் கொண்டுள்ளன. தாவரங்கள் வீட்டில் உட்புற இடங்களை மிகவும் இனிமையானதாக மாற்றுவதோடு, சுத்தமான காற்றையும் தருவதற்கு உதவுகின்றன. மேலும் எண்ணற்ற நன்மைகளுடன் மனதை அமைதிப்படுத்தவும் வழி செய்கிறது.