குழந்தை வளர்ப்பு என்பது சாமானிய விஷயமல்ல, அதுவொரு மிகப்பெரிய கலை. குழந்தைகளை பொறுத்தவரை தங்களது முதல் ஹீரோ, இன்ஸ்பி, ரோல் மாடல் என பலவகைகளிலும் முன்னூதாரணமாக எடுத்துக்கொள்வது பெற்றோர்களை தான். எனவே பெற்றோர்கள் பிள்ளைகள் முன்பு எப்போதும் ஒரு ஹீரோவாக வலம் வர ஆசைப்படுகின்றனர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் சேட்டை செய்வது எல்லை மீறும் போது, கோபம் தலைக்கேறி மான்ஸ்டர்கள் போல் பிள்ளைகளை அச்சுறுத்துவதும் உண்டு. எந்தவொரு பெற்றோரும் இதை விரும்பிச்செய்வது கிடையாது. பெற்றோர் வேண்டுமென்றே கத்த மாட்டார்கள். அவர்கள் நிலைமையை கட்டுப்படுத்த கத்துவதை தவிர வேறு வழியில்லை என்று நம்புகிறார்கள்.
1. நகைச்சுவை உணர்வு: பெற்றோர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பது, குழந்தைகள் தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர ஊக்குவிக்கிறது. குடும்பங்களில், நல்ல நகைச்சுவை உணர்வு நிறைந்திருப்பது, குழந்தைகள் பெற்றோர்களுடன் திறந்த மற்றும் கட்டுப்பாடற்ற தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. வீட்டில் நீங்கள் ஜாலியான நபராக இருந்தால், மன அழுத்த ஹார்மோன்கள் குறைக்கப்படுகின்றன, எண்டோர்பின்கள் தூண்டப்படுகின்றன, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமை அதிகரிக்கிறது, இதெல்லாம் உங்களுடைய பிள்ளைகளுடன் ஜாலியாக நீங்கள் நடந்துகொள்வதால் கிடைக்கும் எக்ஸ்ட்ரா போனஸ் ஆகும்.
2. நெகிழ்வு தன்மை: குழந்தைகளிடம் எப்போதும் கண்டிப்பு காட்டும் பெற்றோராக இருப்பது அவர்களை நல்வழிப்படுத்த எந்த வகையிலும் உதவாது. எனவே பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளின் விஷயத்தில் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பெற்றோர் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளிடம் சத்தம் போட மாட்டார்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் குழந்தை தவறு செய்துவிட்டால், அதை சரி செய்வதற்கான வழியை தேர்வு செய்வார்களோ தவிர, ‘ஏன் இப்படி செய்தாய்’, ‘எல்லாம் உன்னால் தான் நடந்தது’ என சத்தம் போட்டு, குழந்தையின் மனதைக் காயப்படுத்த மாட்டார்கள்.
3. உணர்ச்சி இடப்பெயர்ச்சி: உணர்ச்சி இடப்பெயர்ச்சி என்பது பெற்றோர்கள் எதிர்மறையான உணர்வுகளுக்கு பதிலாக பாசிட்டிவான உணர்வுகளை வெளிக்காட்டுவது ஆகும். தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா பெற்றோருக்குமே மன அழுத்தம் உள்ளது. உணர்ச்சி இடப்பெயர்ச்சி என்பது ஒரு பாதுகாப்பு பொறிமுறையாகும், இதில் ஒரு நபர் ஒரு சூழ்நிலையில் உள்ள உணர்வுகளை எடுத்து வேறு இடத்தில் வைக்கிறார். அதாவது உணர்வுகளை அடையாளம் கண்டு, தவறான உணர்வை விடுத்து, சரியான உணர்வுகளை வெளிக்காட்டுவது ஆகும். இதனை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளிடம் கடைபிடிக்க வேண்டும். வேலை மற்றும் வீட்டில் உள்ள பிற விஷயங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை குழந்தைகள் மீது காட்டுவதை இது தவிர்க்க உதவும்.
4. அதிகாரமளித்தல்: குழந்தைகள் உங்களில் இருந்து வந்தவர்கள் தான், அதற்காக அவர்களுடைய அனைத்து முடிவுகளிலும், முயற்சிகளிலும் நீங்கள் இருக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. குழந்தையின் முதல் நடை தொடங்கி கார் ஓட்ட கற்பது வரை பல விஷயங்களிலும் அவர்களாகவே தங்களது பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொண்டு முன்னேற வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் சில விஷயங்களில் தாங்களே முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை கொடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் பொறுப்பைக் கொடுத்து அதற்கான தன்னம்பிக்கையையும் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும்.
5. மாறுபட்ட கண்ணோட்டம்: குழந்தை வளர்ப்பில் மாறுபட்ட கண்ணோட்டம் என்பது மிகவும் தேவையானது. ஏனெனில் பிள்ளைகள் வளர, வளர அவர்கள் பல்வேறு விஷயங்களை கடந்து செல்ல வேண்டியிருக்கும், அப்போது அவர்களுக்கு கவனமும் வழிகாட்டுதலும் தேவைப்படும். உங்கள் குழந்தையின் நடத்தை மற்றும் பழக்கவழக்கங்களில் ஏற்படும் இந்த மாற்றங்களுக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு பெற்றோராக பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை பூதக்கண்ணாடி கொண்டு அலசி ஆராயாம்ல், அவர்களை அவர்கள் வழியில் முன்னேற விடுவது முக்கியமானது.