நான்- ஸ்டிக் மீது இருந்த மோகம் போய் தற்போது பலரும் ஆரோக்கியமான வாழ்க்கைகுத் திரும்பியதால் இரும்புப் பாத்திரங்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எப்படி ஆரம்பத்தில் நான் - ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தும்போது குழப்பம், தடுமாற்றம் இருந்ததோ..அதேபோல் தற்போது இரும்பு பயன்படுத்தும்போதும் இருக்கிறது. இரும்புப் பாத்திரங்களை பயன்படுத்தும்போதும் சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டியுள்ளது. அந்த வகையில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
இரும்பு சமையல் பாத்திரத்தின் நன்மைகளை எடுத்துரைத்த, ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர, உடலில் இரும்புச் சத்தை அதிகரிக்க எளிதான வழி உங்கள் சமையலறையில் இரும்பு பாத்திரங்களை சேர்ப்பதுதான் என்றார். இரும்புத் தவா, கடாய் ஆகியவை உடலின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகின்றன. அதாவது நீங்கள் உண்ணும் உணவில் சிறிய அளவு இரும்பைச் சேர்க்கின்றன. குறிப்பாக நுண்ணூட்டச் சத்து குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இரும்பு பாத்திரங்கள் குடல் நோய்க்குறி மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.