நம்முடைய சமையலறையில் பயன்படுத்தப்படும் காய்கறிகள்,கீரை தண்டுகள் என பல்வேறு உணவுப் பொருள்களை வீணாக்காமல் நாம் மீண்டும் வேறொன்றிற்கு உபயோகப்படுத்தலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் முட்டை ஓட்டியில் கால்சியம் நிறைந்துள்ளதால் மீண்டும் சமையலில் நாம் பயன்படுத்த முடியும் என்பது இதுவரை பலருக்கும் தெரியாது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புரோட்டீன் மற்றும் கால்சியம் உணவுகளை வழங்க வேண்டும் என்றால் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வோம். பின்னர் முட்டை ஓட்டை நிச்சயம் குப்பைத் தொட்டியில் அல்லது செடிகளுக்கு உரமாக போடுவது வழக்கம். இதை நீங்கள் கீழே போட வேண்டாம் என்றும், மற்ற கால்சியம் நிறைந்த உணவுப்பொருள்களைக் காட்டிலும் முட்டை ஓட்டில் அதிகளவில் கால்சியம் உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பற்களின் ஆரோக்கியம் : முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் பற்பொடி தயாரிக்கலாம். ¼ கப் நொறுக்கப்பட்ட முட்டை ஓடுகள், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2 டீஸ்பூன் காஸ்டில் சோப் மற்றும் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும். இப்போது இயற்கையான பற்பொடி தயாராகிவிடும். ஏற்கனவே முட்டை ஓடுகளில் கால்சியம் உள்ளதால் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சூப் மற்றும் ஜூஸில் முட்டை ஓடுகள் : கால்சியம் அனைவருக்கும் தேவையான ஒன்று. முட்டை ஓடுகளில் அதிக கால்சியம் நிறைந்துள்ளதால் உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், அன்றாட கால்சியம் தேவைகளை நிவர்த்தி செய்யவும் சூப்கள், பழச்சாறுகள் போன்றவற்றில் நன்கு பொடியாக்கி முட்டை ஓடுகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். இதே போன்று சில குழம்பு வகைகளிலும் முட்டை ஓடுகளை உபயோகிக்கலாம். இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அளவுக்கு மீறி உபயோகிக்கக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.. எனவே இனி மேல் முட்டை ஓடுகளை தூக்கி எறியாமல் மேற்கண்ட வழிமுறையில் பயன்படுத்துவதற்கு நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..