வீட்டில் பாத்திரம் கழுவதுதான் நமக்கு இருக்கும் ஆகக் கடினமான கடமைகளில் ஒன்று. பாத்திரம் கழுவ நீண்ட நேரம் பிடிக்கும் என்பதுடன், சோர்வாக உணரும் தருணங்களில் இந்த வேலையை செய்வது பெரும் சவாலாக தோன்றும். இத்தகைய நிலையில் தான், பாத்திரம் கழுவுவதற்கான இயந்திரங்கள் வீட்டு வேலை செய்பவர்களுக்கான வரப்பிரசாதம் போல அமைந்துள்ளன.
சமயலறையில் சௌகரியத்தை தருகின்ற பல இயந்திரங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பல்வேறு தயக்கம் மற்றும் தவறான புரிதல் காரணமாக அனேக மக்கள் பாத்திரம் கழுவுகின்ற இயந்திரத்தை பயன்படுத்த முன்வருவதில்லை. ஆகவே, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், கோத்ரஜ் வீட்டு உபயோக பொருள் நிறுவனத்தின் அதிகாரி ராஜிந்தர் கௌல் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கட்டுக்கதை 1 - கைகளால் கழுவுவதைப் போல வராது : கைகளால் கழுவுவதைக் காட்டிலும் சிறப்பான முறையில் இயந்திரங்களில் பாத்திரங்களை கழுவ முடியும். டிரிபிள் வாஷ் ஸ்பிரே மற்றும் சூடான தண்ணீரில் கழுவும் தன்மை போன்ற பல்வேறு வசதிகள் இயந்திரங்களில் இருப்பதால் சின்ன, சின்ன திட்டுகள் மற்றும் எண்ணெய் பிசுப்பு ஆகியவை சுத்தமாக நீக்கம் செய்யப்படும்.
கட்டுக்கதை 2 - பெரிய பாத்திரங்களை கழுவ முடியாது : பெரிய கடாய், பிரஷர் குக்கர் அல்லது இட்லி சட்டி போன்ற பெரிய பாத்திரங்களை எல்லாம் இயந்திரம் எந்த அளவுக்கு சுத்தமாக கழுவுகிறது என்பதை பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். அதேபோல, சின்ன, சின்ன ஸ்பூன்கள், கத்தி, அனைத்து அளவுகளில் உள்ள தட்டுகள், கப், பாட்டில், கிளாஸ் உள்ளிட்ட அனைத்தையும் அழகாக சுத்தம் செய்யும்.
கட்டுக்கதை 3 - அதிக பிசுக்கு பிடித்த பாத்திரங்களை கழுவாது : இந்திய சமையல் முறைகளில் நெய், டால்டா, எண்ணெய் போன்ற பிசுபிசுப்பான பல பொருட்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளப்படும். இதுபோன்ற பாத்திரங்களை இயந்திரங்கள் சுத்தமாக கழுவாது என்ற எண்ணம் பரவலாக நீடிக்கிறது. ஆனால், நம்மை காட்டிலும் இயந்திரம் சூப்பராக சுத்தம் செய்யும்.
கட்டுக்கதை 4 - கிளாஸ் பொருட்கள் உடையும் : உண்மையை சொல்லப் போனால், கிளாஸ் பாத்திரங்களை நாம் கைகளால் கழுவும்போது கை நழுவி விழுந்து உடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இயந்திரங்களில் நீங்கள் கிளாஸ் பொருட்களை கழுவுவது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. குறிப்பாக, கிளாஸ் பொருட்களை வைப்பதற்கான தனி இடம் இயந்திரங்களில் உண்டு.
கட்டுக்கதை 5 - அதிக நேரம் எடுக்கும் : இயந்திரங்களில் பாத்திரம் கழுவினால் உங்கள் சிரமம் குறையும் மற்றும் நேரம் மிச்சமாகும் என்பதே உண்மை. இது மட்டுமல்லாமல் கைகளால் கழுவும் பாத்திரங்களில் ஈரத்தை நீங்கள் துடைத்து வைக்க வேண்டும் அல்லது உலரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், இயந்திரங்களில் அதற்கான தேவை எதுவும் இல்லை.
கட்டுக்கதை 6 - அதிக தண்ணீர் மற்றும் மின்சாரம் செலவாகும் : சாதாரணமாக வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பாத்திரங்களை கழுவ சராசரியாக 102 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இயந்திரங்களில் அதனை சுத்தம் செய்ய 12 லிட்டர் தண்ணீர் போதுமானது. இது மட்டுமல்லாமல் இது குறைவான மின்சாரம் பயன்படுத்துவதற்கான ஸ்டார் ரேட்டிங் கொண்டதாகும்.