பண்டைய காலம் முதலே மெழுகுவர்த்திகளின் மீது மக்களுக்கு அதீத ஈடுபாடு இருந்து வந்துள்ளது. மங்களகரமான நிகழ்வுகளின் போதும், மத சடங்குகளின் போதும், மேலும் வீட்டை அலங்கரிக்கவும் மெழுகுவர்த்திகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நமக்கும் ஒளி தரும் இந்த மெழுகுவர்த்திகள் வாசனைப் பொருட்கள் பயன்படுத்தபட்டு அவை ஒளிரும் போது அனைவரும் விரும்பும் வாசனையை வெளியிடும் வண்ணம் தயாரிக்கப்படுகிறது.
இது நம் சுற்றுப்புறத்திற்கு ஒளியை தருவது மட்டுமல்லாமல், மனதளவிலும் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களை நமக்குள் ஏற்படுத்துகிறது. சமீபகாலமாக நடந்து வரும் கொரோனா தொற்று போன்று பல விரும்பத் தகாத நிகழ்வுகளினால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களை சுற்றி வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டால் அவை மனதை ஆசுவாசப்படுத்த உதவுகிறது. இவ்வாறு வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
ஆழ்ந்த உறக்கம் : இன்றைக்கு பலரும் உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இரவில் உறங்கும் போது தங்களை சுற்றி வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து உறங்கினால் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. இந்த வாசனை மெழுகுவர்த்திகள் நமது உடலுக்குள் இயங்கும் சர்காடியம் ரிதம் எனப்படும் உயிரியல் கடிகாரத்தை சரியான விதத்தில் இயங்க வைக்கிறது. இந்த உயிரியல் கடிகாரம் தான் நாம் சரியான நேரத்திற்கு தூங்குவதையும், விழிப்பதற்கும் உதவி செய்கிறது . உறங்கும்போது நம்மை சுற்றி வாசனை மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து உறங்கும்போது இவை ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முக்கியமாக வயதில் மூத்தவர்கள் இந்த முறையை பின்பற்றினால் அவர்கள் மனதளவிலும் அதிக ஆறுதலாக உணர்வார்கள்.
நினைவாற்றலை அதிகப்படுத்துகிறது : நம்முடைய அனைத்து ஞாபகங்களும் மூளையில் உள்ள நினைவகத்தில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. வாசனை மெழுகுவர்த்திகள் மூளையில் சேமிக்கப்படும் இந்த நினைவகத்தை தூண்டி பல்வேறு விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளவும், மறந்து போன விஷயங்களையும் மீண்டும் நினைவு படுத்தவும் உதவுகிறது.
மன அழுத்தத்தில் இருந்து விடுதலை அளிக்கிறது : சில மெழுகுவர்த்திகள் உடலில் உள்ள கார்டிசால் சுரப்பதை குறைத்தும் நம் மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய டோபோமைன் மற்றும் செரோடொனின் ஆகியவை சுரப்பதை அதிகரிக்கவும் செய்கிறது. இவை அனைத்துமே இயல்பாக நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் தேவையற்ற மன அழுத்தங்களில் இருந்து வெளிவரவும் உதவுகிறது.
ஆன்மீக வளர்ச்சி : யோகா, தியானம் போன்ற ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் தங்களது பயிற்சிகளின் போதும் மெழுகுவர்த்திகளை பயன்படுத்துவார்கள். அதிலும் ஜாஸ்மின், லாவண்டர், பெப்பர் மின்ட் போன்ற வாசனை மெழுகுவர்த்திகள் ஆன்மீக பயிற்சிகளின் போது மனதை புத்துணர்ச்சியுடன் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவுகிறது.