கோடை வெயில் நம்மை மட்டுமல்லாது நமது வளர்ப்புப் பிராணிகளையும் வாட்டி வதைக்கக் கூடியதுதான். ஆகவே, நமது வளர்ப்புப் பிராணிகளை பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். வெளியிடங்களில் நடைபயிற்சி அழைத்துச் சென்றாலும் சரி அல்லது கார் பயணத்தின் போது அழைத்துச் சென்றாலும் அல்லது பூங்காக்களில் விளையாடுவதற்கு அழைத்துச் சென்றாலும் நமது செல்லமான நண்பனின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மீது நாம் அக்கறை செலுத்த வேண்டும்.
வெப்ப அலை காலத்தில் இந்த அறிகுறிகளை கவனியுங்கள்: வெப்ப அலை அதிகரிக்கும் சமயங்களில் உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு மூச்சிறைப்பு, இதயத் துடிப்பு அதிகமாகுதல் மற்றும் அதிக எச்சில் சுரப்பு போன்ற சிரமங்கள் ஏற்படக் கூடும். இதுபோன்ற சமயங்களில் நீங்கள் வெளியிடங்களில் வளர்ப்புப் பிராணிகளுடன் இருக்கிறீர்கள் என்றால், அவை நிழலில் இருப்பதை உறுதி செய்யுங்கள். சுத்தமான மற்றும் குளுமையான தண்ணீரை கொண்டு அவற்றை குளிப்பாட்டவும்.
காரில் விட்டுச் செல்ல வேண்டாம்: கார் கதவுகளை இறுக்கமாக மூடி விட்டு, உள்ளே உங்கள் வளர்ப்புப் பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம். தற்போதைய சூழலில், வெப்பத்தால் பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சாதாரணமாக ஒரு காரில் 40 டிகிரி அளவுக்கு வெப்பம் இருக்கிறது என்றால், நேரடி வெயிலில் அதை நீங்கள் நிறுத்திவிட்டு செல்லும்போது 120 டிகிரி அளவுக்கு அதிகரித்து விடுகிறது. ஆக, சில நிமிடம் என்றாலும் கூட, வளர்ப்பு பிராணிகளை காரில் அடைத்து வைக்க வேண்டாம்.
பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு: பூச்சி, ஈ மற்றும் வண்டு போன்றவற்றின் தொந்தரவுகளில் இருந்து வளர்ப்புப் பிராணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பொதுவாக மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் பாதி வரையிலும், ஆகஸ்ட் பாதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரையிலும் இதுபோன்ற பூச்சி வகைகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். பூச்சி மற்றும் ஈக்களை கொல்லக் கூடிய ஸ்பிரே வாங்கி பயன்படுத்தலாம்.
பாதங்களை குளுமைபடுத்துவது முக்கியம்: கோடை காலத்தில் வீட்டை சுற்றியிலும் உள்ள கான்கிரீட் தளங்கள், டைல்ஸ் புளோரிங், நடைபாதைகள் போன்றவற்றில் அதிக வெப்பம் காணப்படும். அவற்றின் மீது நடந்து செல்லும் வளர்ப்புப் பிராணிகளின் உடல்நலன் பாதிக்கப்படும் என்றாலும் கூட, நேரடி தொடர்பில் இருக்கும் பாதங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள கூடும். ஆகவே, பாதங்களை குளிர்விக்க வேண்டும். முடிந்த வரையில் முழுமையாக குளிப்பாட்டுவது நல்லது.
முடி வெட்டுவது அவசியம்: வளர்ப்புப் பிராணிகளுக்கு வாடிக்கையாக அவ்வபோது முடி வெட்டி விடுவது அவசியம். இதைச் செய்தால் மட்டுமே அவை ரிலாக்ஸ்-ஆக இருக்கும். இயல்பாகவே கோடை காலத்தின் வெப்பத்தையும், குளிர் காலத்தின் நடுக்கத்தையும் தாங்கும் வகையில் வளர்ப்புப் பிராணிகளின் தோல் அமைப்பு இருக்கும். இத்தகைய சூழலில், முழுமையாக முடியை வெட்டி விடாமல் லேசாக வெட்டி விட்டால் போதுமானது.
எடையை கண்காணிக்கவும்: குளிர் காலத்தில் பல வளர்ப்புப் பிராணிகளின் எடை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கும். ஆகவே, வளர்ப்புப் பிராணிகளின் உடற்பயிற்சியை அதிகரிக்கவும், உடல் அமைப்பை கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் கோடை காலம் தான் சரியான சமயம் ஆகும். ஆகவே தினசரி காலை அல்லது மாலை வேளைகளில் அவற்றை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
சரியான உணவை கொடுக்கவும்: கோடைகாலத்தில் வளர்ப்புப் பிராணிகளுக்கு கொடுக்கும் உணவு எதுவானாலும் திரவ வடிவில் இருந்தால் நல்லது. இது மட்டுமல்லாமல் காய்கறி அல்லது பழங்கள் போன்றவற்றை உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அவை உதவும். குறிப்பாக, தர்ப்பூசணி பழத்தை உங்கள் வளர்ப்புப் பிராணிகள் விரும்பி சாப்பிட்டால், அதில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு தாராளமாக கொடுக்கலாம். இது தவிர தயிர் சாதம், மோர், வாழைப்பழம், ஆரஞ்சு, வெள்ளரிக்காய் போன்றவற்றை அவற்றுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.