நமது பல்வேறு உடல் நல பிரச்சனைகளை சரி செய்யும் திறன் யோகாசனத்திற்கு உள்ளது. மனித உடல் ஒரு சிக்கலான அமைப்பாகும். உடலின் சரியான செயல்பாட்டிற்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் அவசியமாகும். நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலிருந்து நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதற்கு செரிமான அமைப்பு சீராக இயங்குவது அவசியமாகும்.
செரிமானம் சீராக நடந்தால், நமது உடலுக்கு தேவையான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் சீராக பிரித்து வழங்கப்படுகிறது. எனவே நாம் ஆரோக்கியமாக இருக்க நமது குடலின் சீரான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இதற்கு யோகாசனங்கள் மிகவும் துணை புரிகிறது. தினமும் யோகாசனம் செய்வதால் உடலும், மனமும் புத்துணர்ச்சியாக மாறுவது மட்டுமின்றி செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.செரிமான அமைப்பு சீராக இயங்க செய்ய வேண்டும் யோகாசனங்கள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.,
சுகாசனா : சுகாசனா எளிமையாக செய்யக்கூடிய ஆசனங்களில் ஒன்று. இந்த ஆசனம் செய்ய முதலில் உங்கள் இரண்டு கால்களையும் நீட்டி நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். இடது காலை மடக்கி வலது தொடையின் மீது வைக்கவும். பின்னர் வலது காலை மடக்கி இடது தொடையின் மீது வைக்கவும். உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும். இப்போது முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடவும்.
தண்டாசனா : தண்டாசனா செய்வதால் செரிமான பிரச்சனைகள் சரி செய்வது மட்டுமின்றி, முதுகு வலி, சீரற்ற இரத்த ஓட்டம் போன்ற பிரச்சனைகளும் குணமாகிறது. இந்த ஆசனம் செய்ய தரையில் கால் நீட்டி அமருங்கள். முதுகை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மார்பை நிமிர்த்துங்கள். பாத விரல்கள் மேலே நோக்கி இருக்கும்படி செய்யுங்கள். குதிகால்களுக்கு தரையில் அழுத்தி உள்ளங்கைகளை தரையில் ஊன்றி அழுத்தம் தர வேண்டும். இதனால் உடல் விறைப்பாக உயரும். இதே நிலையில சில நிமிடங்கள் நீட்டித்து பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
மலாசனா : மலாசனா ஆசனம் செய்ய சமதள தரையில் யோகா மேட்டை விரித்து கால்களை அகலமாக விரிக்கவும். முழங்கால்களை வளைத்து,உங்களின் பின்புறத்தின் அகலத்தை குறைத்து குந்து காலில் அமரவும். முழங்கைகளை வளைத்து உள்ளங்கைகளை ஒன்றாக கொண்டு வந்து முழங்கால்களுக்குள் உங்கள் கைகளை வைத்து உங்கள் முழங்கைகளை, உள் முழங்கால்களுக்கு எதிராக அழுத்தவும். அதாவது கைகூப்பி வணங்குவது போல உங்கள் இரு கைகளையும் இணைத்து வைக்க வேண்டும். பின்னர் உங்கள் முதுகெலும்பை நடுநிலைத் தன்மையாக வைத்து, கழுத்துப்பகுதியை நேராக வைத்து, தோள் பகுதியை ரிலாக்சாக வைத்துக் கொள்ளவும். சில நிமிட சுவாச பயிற்சிக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
அதோ முகீ மர்ஜாரி ஆசனம் : அதோ முகீ மர்ஜாரி ஆசனம் தவழும் குழந்தையின் நிலை போன்ற போஸ் ஆகும். முதல் குழந்தை தவழ்வது போல இருக்க வேண்டும். அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி உங்களின் இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் விதமாக உங்கள் உள்ளங்கைகளயும் உங்கள் கால்களையும் தரையில் வைக்கவும். உள்ளங்கைகளை தரையில் அழுத்தி, மூச்சை வெளியே விட்டவாறு, கால் முட்டியை தரையில் இருந்து எடுத்து இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும். உங்கள் பாதங்களை தரையில் வைக்கவும். இப்பொழுது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யை திருப்பி போட்டது போல் இருக்கும். இப்போது உங்கள் தொப்புளை நீங்கள் பார்க்கும் வண்ணம் தலையை உள்புறமாக கொண்டு செல்லவும். உங்களால் முடிந்தவரை இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
வஜ்ராசனம் : வஜ்ராசனம் உட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். மண்டியிட்டு புட்டம் பாதங்களில் படும்படி அமரவேண்டும். அதாவது வலது குதிகாலை மடித்து வலது புட்டத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும். இடது குதிகாலை மடித்து இடது புட்டத்தின் அடியில் வைக்கவும். முழங்கால்கள் இணைந்து இருக்க வேண்டும். இரு உள்ளங்கைகைளயும் முழங்கால் மீது வைத்து ஐந்து இயல்பான மூச்சை விடவும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், சொிமான மண்டலம் நன்றாக இயங்கும். மேலும் தண்டுவடம், கால் தசைகள் , கணுக்கால்கள் வலுப்பெறும்.