பிஸியான பெண்கள் தினமும் தவறாமல் இந்த யோகாசனங்களை செய்தால் பலன் உண்டு..!
Web Desk | March 15, 2021, 1:39 PM IST
1/ 9
இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் நுழைந்து தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். ஆனால் ஆண்களை போல பெண்களுக்கு அலுவலக வேலை மட்டும் இருப்பதில்லை. வீட்டில் அதிகாலை எழுந்து வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை தங்களது குடும்பத்தில் இருப்போருக்கு தேவையான பணிவிடைகள் மற்றும் உணவுகளை செய்து வைத்து விட்டு, தங்களுக்கு வேண்டிய சிலவற்றை தியாகம் செய்து தான் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் காலடி எடுத்து வைக்கின்றனர்.
2/ 9
என்ன தான் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் உடல் உறுதியில் சற்று பலவீனமாகவே பெண்கள் இருப்பர். குடும்பம், அலுவலகம் என்று மாறி மாறி ஓடிக்கொண்டே இருக்கும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடலை கவனித்து கொள்வதில்லை. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஒரு சரியான சமநிலையை பராமரிக்க முடியாமல் பெண்கள் கடும் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
3/ 9
இப்படிப்பட்ட பெண்களுக்கு சிறந்த தீர்வு யோகா தான். யோகாவால் உங்கள் தசைகளை ஸ்ட்ரெச் செய்வதோடு மட்டுமல்லாமல், மனதை அமைதிப்படுத்தவும் முடியும்,தினமும் ஒரு அரைமணி நேரம் ஒதுக்கி சில யோகா பயிற்சிகளை செய்து வந்தால் மன உறுதியோடு, உடல் உறுதியும் அதிகரிக்கும்.ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுக்கு ஒவ்வொரு பெண்ணும் தினமும் செய்ய வேண்டிய யோகாசனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
4/ 9
சக்ரவாகாசனா (Chakravakasana): முதுகு தொடர்பான எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய ஆசனம் இது. முட்டி போட்டு கொண்டு பின் முன் புறமாக நகர்ந்து சென்று இரு உள்ளங்கையும் தரையில் படியும்படி வைத்து கொள்ளுங்கள். தலையை தளர்வாக வைத்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் வயிறு அமுங்கி இருக்குமாறும், கால் விரல்களை உள்நோக்கி வைத்து கொள்ள வேண்டும். இது தயார் நிலை. தொடர்ந்து மூச்சை உள்ளே இழுத்தபடி வயிற்று பகுதியை தரை நோக்கி கொண்டு சென்று, தலையோடு உடலை மேல் நோக்கி முன்னுக்கு கொண்டு வந்து சற்று மேல்நோக்கி பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகு லேசாக வளையும்.
5/ 9
ஓரிரு விநாடிகளுக்குப் பின் உயர்த்தி இருக்கும் தலையை தாழ்த்தி விட்டு மூச்சை வெளியேவிட்டபடி வயிற்றை பழைய நிலையில் வைக்க வேண்டும். பின் முன் பக்கம் மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு நாளொன்றுக்கு 6 முறை செய்து வந்தால் முதுகுப் பகுதி பலமடையும்.
6/ 9
அதோமுக ஸ்வனாசனா (Adhomukh Svanasana): முதலில் கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். இப்படி நிற்கும் போது உங்கள் உடல் அமைப்பு டேபிள் போன்று இருக்கும். பின் மெதுவாக மூச்சை வெளியே விட்டு, இடுப்பை சிறிது உயர்த்தி, முழங்கைகள் மற்றும் முழங்கால்களை நேராக்கி ‘V’ ஷேப்பில் நிற்க வேண்டும். இதை செய்யும் போது முழங்கைகள் மற்றும் முழங்கால்களை நேராக்குங்கள். இப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்த நிலையில் 10 நொடிகள் நிற்க வேண்டும். பின் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள். இப்படி 5 முதல் 10 முறை மெதுவாக செய்ய வேண்டும்
7/ 9
இந்த ஆசனத்தை செய்வதால் தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் வேகமாகும். இதனால் மன அழுத்தம் நீங்கி உடல் உற்சாகமடைகிறது. மேலும் கைகள், தோள்பட்டைகள் இணையும் இடங்களில் உராய்வினால் வரும் வலிகள் நீங்கும்.
8/ 9
பாலாசனா(Balasana): பாலாசனா எனப்படும் இந்த ஆசனம் சிசு நிலை என்றும் அழைக்கப்படுகிறது. கீழே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு முழங்காலுக்கு கீழ் மற்றும் கணுக்காலுக்கு மேலுள்ள காலின் முன் பகுதி தரையில் இருகுமாறு வைத்து கொள்ள வேண்டும். கால் கட்டை விரல்கள் இரண்டும் தொட்டு கொண்டு இருக்கும்படி வைத்து குதி கால்களின் மீது உட்கார வேண்டும். இரு கைகளும் பக்கவாட்டிலேயே இருக்கட்டும். மூச்சை வெளியே விட்டபடி தொடைகளுக்கிடையே உடலை கொண்டு வர வேண்டும்.
9/ 9
பின் மெதுவாக தலையால் தரையை தொட வேண்டும். இந்த நிலையில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம். மூச்சினை உள்ளே இழுத்து மீண்டும் பழையபடி உட்கார்ந்த நிலைக்கு வர வேண்டும். இந்த ஆசனம் கழுத்துவலியை போக்கி, மனதை அமைதியாக்கி புத்துணர்ச்சி பெற வைக்கிறது.