மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்கள் மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. இதில் முக்கியமான ஒரு நோய் பக்கவாதம் ஆகும். மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு அல்லது கசிவு ஏற்பட்டு, ரத்தம் செல்வதில் தாமதம் ஏற்படும் போது அல்லது ரத்தம் செல்லாத போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளையின் முக்கிய பகுதிகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் தடைபடுவதன் காரணமாக மூளையின் பாகங்கள் செயல் இழப்பதே பக்கவாதமாக வெளிப்படுகிறது. பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள், தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஆண்டுதோறும் அக்டோபர் 29 (இன்று) உலக பக்கவாதம் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒருவர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அறிகுறி அல்லது சூழலில், அருகிலிருப்பவர் எப்படி பாதிக்கப்படுபவருக்கு உதவ முடியும் என்பதை பற்றிய விழிப்புணர்வும் இந்த நாளில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஒருவரை விரைவாக அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரை அடையாளம் காண உதவும் அறிகுறிகளின் சுருக்கம் BE FAST ஆகும்.
பேலன்ஸ் (Balance - B): பெரும்பாலும் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஒரு நபர் தனக்கு இருக்கும் தெளிவற்ற நிலைகளை வெளிக்காட்டுவார். பேலன்ஸ் இல்லாமல் தள்ளாடுவது அல்லது தலைச்சுற்றல் அல்லது தலை பாரமாக இருப்பது உள்ளிட்ட அறிகுறிகளை காட்டுவார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் பேலன்ஸிற்காக எதையாவது பிடித்து கொள்ள அல்லது உட்கார முனைவார்கள்.
கண் பிரச்சனைகள் (Eye problems - E): உங்கள் வீட்டிலிருக்கும் அன்பான நபர்கள் அடிக்கடி தனது பார்வை மங்கலாக இருப்பதாக கூறினால், நீங்கள் அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரம் அது. அதிகம் வெயிலில் சுற்றுவது அல்லது பகல் நேரங்களில் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால் பார்வை பிரச்னை ஏற்படுவதாக சிலர் தங்களுக்கு தாங்களே நினைத்து கொள்ளலாம். ஆனால் மங்கலான பார்வை உள்ளிட்ட திடீர் கண் பிரச்சனைகள் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
முக தொய்வு (Facial drooping - F): பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரின் முகத்தின் பாதி (குறிப்பாக ஒரு பக்கத்தின் கீழ் பாதி) தொங்குவது அல்லது தொய்வடைந்திருப்பது போல் இருக்கும். அவர்கள் பேசும் போது முகத்தின் ஒரு பக்கம் எந்த வெளிப்பாட்டை காட்டாமல் மறுபக்கம் வழக்கத்தை விட அதிமானான மூவ்மெண்ட் இருக்கும். இதனால் முகம் சற்றோ அல்லது அதிகமாகவோ கோணலாக காணப்படும்.
கை பலவீனம் (Arm weakness - A): பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தான் எடுக்கும் பொருள் கையில் இருந்து விழும் வரை இந்த பலவீனம் இருப்பது தெரியாது. பக்கவாதம் கை அல்லது தோளில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தசைகளில் பலவீனத்தை ஏற்படுத்தும். இதனால் கைகளில் திடீரென பலவீனம் ஏற்பட்டு பொருட்களை இயல்பாக தூக்க கூட முடியாமல் போகும்.
பேச்சு (Speech - S): குறிப்பாக மூளையின் இடது பக்கத்தில் பக்கவாதம் ஏற்படும் ஒருவருக்கு திடீரென பேசுவதில் சிக்கல்கள் ஏற்படும். இது தவிர பாதிக்கப்படும் நபர் அமைதியாக அல்லது குழப்பமாக காணப்படலாம். ஊரே வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருக்கலாம். நன்றாக பேசி கொண்டிருக்கும் போதே அவர்களின் பேச்சு மந்தமாகவோ அல்லது சம்பந்தமில்லாமலோ இருக்கலாம்.
டி (T ): BE FAST-ல் கடைசியாக வரும் T ஒரு அறிகுறி இல்லை. பக்கவாத சிகிச்சையில் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே விழிப்புணர்வில் T வைக்கப்பட்டு உள்ளது. இங்கே நேரம் என்பது மூளை (Time is brain).பக்கவாதத்திற்கு சிகிச்சையளிக்க எவ்வளவு தாமதம் செய்யப்படுகிறதோ அவ்வளவு சேதம் ஏற்படும் என்பதை வலியுறுத்த T பயன்படுத்தப்படுகிறது.