’புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு கேடு தரும் உயிரைக் கொள்ளும்’ இந்த வாசகத்தை அடிக்கடி கேட்டிருந்தாலும் கூட, பெரும்பாலான நபர்கள் அந்தப் பழக்கத்தை விட்டுத் தொலைக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலனுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்ற அனைவருக்கும் தெரியும். ஆனால், தினசரி பழக்கமாகிவிட்ட அதை நிறுத்துவது அவ்வளவு சுலபமானது அல்ல என்று பலர் கருதுகின்றனர்.
புகைப் பழக்கத்தை நீங்கள் விட வேண்டும் என்றால் நிறைய பொறுமையும், மன உறுதியும் தேவை. பொதுவாக திரைப்படங்களில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது இயல்பானதாகி விட்டது. திரைப்படத்தை பார்த்தே சிகரெட் பழக்கத்திற்கு ஆளான நபர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், அதே திரைப்பட நடிகர்கள் தான், தங்கள் சொந்த வாழ்க்கையில் பெரும் முயற்சிகளுக்குப் பிறகு புகைப் பழக்கத்தை கைவிட்டிருக்கின்றனர். பாலிவுட் திரைப்படத் துறையில் இந்தப் பழக்கத்தை நிறுத்திய சில நடிகர்கள் குறித்து இந்தச் செய்தியில் பார்ப்போம்.
சாயிஃப் அலி கான் : ஒரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் தான் சாயிஃப் அலி கான். இதனால், 36 வயதிலேயே அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வந்து விட்டது. எனினும், அதில் இருந்து அவர் உயிர் தப்பிவிட்டார். வாழ்க்கையின் அருமை என்ன என்பதை இந்த நிகழ்வில் இருந்து தெரிந்து கொண்ட சாயிஃப் அலி கான், அதற்குப் பிறகு புகைப்பழக்கத்தை நிறுத்தி விட்டார். இது மட்டுமல்லாமல், மது பழக்கத்தையும் கூட அவர் கைவிட்டு விட்டாராம்.
ஹிரிதிக் ரோஷன் : புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று ஹிரிதிக் ரோஷன் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், ஆலன் கார் எழுதிய, ‘புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான எளிமையான வழிகள்’ (Easy way to Stop Smoking) என்ற புத்தகத்தை படித்த போது அவரது மனம் மாறியது. அதில் இருந்து புகைப் பழக்கத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், அந்தப் புத்தகத்தை நண்பர்கள் பலருக்கு பரிந்துரை செய்து வருகிறார் ஹிரிதிக் ரோஷன்.