இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றவும், உடலின் சீரான செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் உதவும் முக்கிய உறுப்பு சிறுநீரகமாகும்.
நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தின் ஆரோக்கியம் குறித்து, அதன் முக்கியத்துவம் குறித்து ஆண்டுதோறும் இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரக ஆரோக்கியம் என்று வரும்போது, சிறுநீரக கற்கள் பிரச்சினை மிகவும் பொதுவான மற்றும் மிகுந்த வலியை தரக்கூடியதாக உள்ளது. சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து தப்பிக்க எளிமையான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக்சலேட் உணவுகளை சாப்பிடுங்கள்: கீரை, சாக்லேட், முட்டைக்கோஸ், அவரை, தக்காளி, கோதுமை போன்ற உணவுகள் ஆக்சலேட்டின் மூலமாகும். இந்த உணவுகள் உடலில் வளர்சிதை மாற்றம் அடையும் போது, ஆக்சலேட்டின் அளவு ரத்தத்தில் அதிகரித்து கால்சியம் ஆக்சலேட் கற்களை உருவாக்க காரணமாக அமையலாம். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஆக்சலேட் வகை உணவுகளை மிதமான அளவு எடுத்துக்கொள்வது நல்லது.
குறைந்த சோடியம் உள்ள உணவைத் தேர்வு செய்யவும் : அதிக சோடியம் உள்ள உணவு சிறுநீரகக் கற்கள் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த அழுத்த அளவையும் பாதிக்கலாம். எனவே, உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகத்தின் நலனுக்காக, உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாஸ்ட்புட், பேக்கிங் சோடா கலந்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
அசைவத்தை குறைத்து, காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள் : உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதை தடுப்பது, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் வழிகளில் ஒன்றாகும். தாவரத்தில் இருந்து கிடைக்கும் புரதத்தை விட விலங்குகளின் இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரதத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே, கோழி, முட்டை, வான்கோழி போன்ற உணவுகளை மிதமாக உட்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பீன்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள் போன்றவற்றை அதிகரிக்கலாம். காய்கறிகளை பொறுத்தவரை பச்சை நிறமும், தண்ணீர் சத்தும் நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய், செளசெள போன்றவற்றை நிறைய எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள் : உணவு மட்டும் அல்லாது, மரபியல், அடிப்படை சுகாதார நிலைமைகள், மருந்துகள் போன்றவையும் சில சமயம் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக அமையலாம். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. சரியான நேரத்தில் நோய் பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தற்காத்து, சீரான காலத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீளலாம்.