பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஏற்படக் கூடிய மன நல பிரச்சினைகளால் அங்கு உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. மிக கடுமையான மன அழுத்தம், கவலை போன்றவற்றால் ஊழியர்களின் சிந்தனை வேறு எங்கோ போய் விடுகிறது. இதனால், பணிகளில் முழுமையான திருப்தியின்மை மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.
ஊழியர்களின் மனநலனை பாதுகாப்பதன் மூலமாக நிறுவனங்களின் உற்பத்தி திறன் மேம்படும் என்பதோடு மட்டுமல்லாமல், நேர்மறையான பணிச் சூழலையும், கலாச்சாரத்தையும் உருவாக்க முடியும். இதனால் திறன் வாய்ந்த நபர்களை தக்க வைத்துக் கொள்ள இயலும். ஆக, உலக ஆரோக்கிய தினத்தில் பணியாளர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
மனநலப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் : எந்தவொரு பிரச்சினையையும் ஒருவர் எப்படி அணுகுகிறார், எப்படி அதை உணருகிறார் என்பதை பொறுத்து அதன் விளைவுகளும் மாறுபடும். இதுகுறித்து, மருத்துவ நிபுணர் விக்ரம் ஓரா கூறுகையில், “மனநலன் பாதிக்கப்படும் ஒவ்வொரு ஊழியர்களுக்குமான அறிகுறிகள் வேறுபடும். ஆனால், கவலை, சோகம், எரிச்சல் உணர்வு, சமூகத்தில் இருந்து விலகியிருப்பது, தனித்து இருப்பது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்.
நிறுவனங்கள் எப்படி உதவி செய்யலாம்? ஊழியர்களுக்கு ஏற்படுகின்ற மனநல பிரச்சினைகள் குறித்து முதலில் நிறுவனங்கள் விவாதிக்க வேண்டும். ஊழியர்கள் மனநல பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் மேலாளர் மூலமாக செய்து கொடுக்க வேண்டும். எந்தெந்த விவகாரங்களால் மனநலன் பாதிக்கப்படும் என்பது குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்.
தனிப்பட்ட விவகாரங்களும் பாதிப்புக்கு காரணம்? ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளும் கூட அவர்களின் மனநலனை பாதிக்கிறது. உதாரணத்திற்கு ஊழியர் ஒருவரின் வீட்டில் யாரேனும் ஒருவருக்கு நீண்டகாலமாக உடல்நிலை பாதிக்கப்படுவது, ஒட்டுமொத்த குடும்பமும் பொருளாதார சிக்கலில் தவிப்பது போன்றவை ஊழியர்களையும் பாதிக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளையும் நிறுவனங்கள் பரிசீலனை செய்து, அதற்கு தீர்வு காண உதவும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.