நம்முடைய உடலின் பல இடங்களில் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் தொடர்ந்து வலிகளை நாம் உணரும் நேரங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் அந்த வலிகளை நாம் புறக்கணிக்கிறோம் அல்லது அதை தற்காலிமாக போக்க மருந்துகளை எடுத்து கொள்ளுகிறோம். இருப்பினும் நம் உடலின் எந்த பகுதியிலும் நாம் உணரும் வலியானது அதன் தோற்றத்தைப் பொறுத்து சாதாரணமானதாகவோ அல்லது தீவிரமானதாகவோ இருக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் கடுமையான வலியால் அவதிப்படுகிறீர்களா? உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தொடர்ச்சியான வலிகள் உங்கள் உடலுக்குள் நடக்கும் உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறிகளாகும், அவற்றைப் புறக்கணிப்பது உங்கள் உயிரைக் கூட இழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில வகையான வலிகளை நாம் தொடர்ந்து புறக்கணிப்பது மார்பு வலியின் அறிகுறிகளை கண்டறியாமல் அல்லது உணராமல் போவது போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மார்பு வலி போன்ற அறிகுறிகளை புறக்கணிப்பது இறுதியில் ஹார்ட் அட்டாக் அல்லது கார்டியாக் அரெஸ்ட்டை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் உடலில் ஏற்படும் வலிகளை அலட்சியம் செய்வது நிலைமையை மோசமாக்கும். எனவே உடலில் காணப்படும் சிறிய அறிகுறிகளை கூட கவனிக்க வேண்டும், நீண்ட நாட்கள் அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மார்பு வலி : சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி மார்பு வலியானது உங்கள் முதுகு அல்லது கைகளுக்கு பரவக்கூடும். மேலும் மற்ற எல்லா வலிகளையும் விட மார்பு வலி, மிகவும் மோசமானது மற்றும் மிகவும் கவலைக்குரியது என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பு வலி லேசாக அல்லது தீவிரமாக இருக்கலாம், மேலும் அது நெஞ்சு பகுதியில் இறுக்கத்தை உணர செய்யலாம், மார்பு நசுக்கப்படுவதைப் போலவோ அல்லது அழுத்தப்படுவதை போலவோ உணரலாம். மார்பு வலி சில நிமிடங்கள் அல்லது மணிநேரம் கூட நீடிக்கும். சில சந்தர்ப்பங்களில் இந்த வலி 6 மாதங்கள் அல்லது அதற்கு மேலும் கூட நீடிக்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி மார்பு வலிக்கான சில காரணங்கள் பின்வருமாறு:
செரிமான பிரச்சினைகள்: செரிமான பிரச்சனைகள் குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. தவிர அஜீரணம் சில நேரங்களில் கடும் வயிற்று வலியையும் ஏற்படுத்துகிறது. இது குடல் அழற்சி, பித்தப்பை நோய், வயிறு அல்லது குடல் கோளாறு அல்லது கணைய அழற்சி போன்ற கடும் உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம். தீவிர வயிற்று வலி திடீரென வரலாம் அல்லது படிப்படியாக ஏற்படலாம். வயிற்று வலிக்கு சர்ஜரி அல்லது தீவிரமான சிகிச்சை அல்லது மருத்துவ மதிப்பீடு தேவைப்படலாம்.
முதுகுவலி : முதுகுவலி என்பது மிகவும் தீவிர அதே சமயம் பலருக்கும் இருக்க கூடிய மற்றும் பொதுவான வலிகளில் ஒன்றாகும். வயதாகும் போது பலருக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சனை இது. எனவே முதுகுவலிக்கான மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவது சிக்கலானதாக இருக்கும். மிதமானது முதல் கடுமையான முதுகுவலி அல்லது 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் வலி நீடித்தால் நிபுணர்களை அணுக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்த வலியை தொடர்ந்து புறக்கணித்தால் காலில் உணர்வின்மை அல்லது பலவீனத்தை ஏற்படுத்தும். முதுகுவலிக்கான பிற தீவிர காரணங்களில் சிறுநீரக கோளாறுகள் அல்லது சிறுநீர்ப்பை செயலிழப்பு இருக்கலாம். இவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும்.
தீவிர தலைவலி : நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி அனுபவிக்கும் ஒன்று தலைவலி. எனினும் இது பொறுக்க முடியாத அளவு செல்லும் போது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். மைக்ரேன், உயர் ரத்த அழுத்தம் அல்லது பெருமூளை ரத்தக்கசிவு அல்லது கட்டி ஆகியவை splitting headache எனப்படும் தீவிர தலைவலி ஏற்பட சில காரணங்களாகும்.
கால் வலி : அதிக உடல் செயல்பாடு அல்லது அதிகமாக உழைக்கும் போது கால்களில் வலியை ஏற்படுவது சகஜம். ஆனால் கால்களில் வலி என்பது பொதுவான மற்றும் தொடர்ச்சியான ஒன்றாக மாறினால் உடனடியாக கவனிக்க வேண்டும். ஒரே ஒரு காலில் மட்டும் வீக்கத்துடன் கூடிய வலி ஏற்படுவது மிகவும் கவலைக்குரியது. ஏனெனில் ரத்த உறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன,சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதே போல பொதுவாக சியாட்டிகா எனப்படும் கீழ் முதுகு வலியுடன், கால் வலி தொடர்புடையதாக இருக்கலாம். கால்களை உயர்த்த முடியாமல் அவதிப்படுவது போன்ற இயக்கத்தை பாதிக்கும் எந்த ஒரு கால் வலியையும் மருத்துவரிடம் சென்று காண்பித்து பரிசோதித்து கொள்ள வேண்டும்.