புகை, மது கூடாது : இன்றைக்கு இளம் தலைமுறையினர் பலரும் செய்கின்ற தவறு புகையிலை பயன்பாடு தான். அது சிகரெட், மென்னும் புகையிலை என எந்த வடிவில் இருந்தாலும் ஆபத்தானதுதான். புகையிலையில் உள்ள ஆபத்து மிகுந்த பொருட்கள் நமது ரத்த தட்டு அணுக்களை ஒன்றோடு, ஒன்று ஒட்டும்படியாக மாற்றிவிடும். அதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படும்.
புகையிலை பயன்பாட்டில் குறைந்தபட்ச பாதுகாப்பு வரம்பு என்பதே கிடையாது. ஒற்றை சிகரெட் கூட 15 தினங்களில் உங்கள் உயிரை பறிக்கும். அதேபோல, எப்போதாவது மது அருந்துவது பெரிய அளவுக்கு ஆபத்தானது இல்லை என்றாலும் கூட, தொடர் பயன்பாட்டின் விளைவுகளை புறம்தள்ளிவிட முடியாது. நமது இதய துடிப்பு மாறுபடலாம். இதய செயலிழப்பு, தூக்கமின்மை பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் போன்றவை மதுப்பழக்கத்தால் ஏற்படலாம்.
சராசரி அளவுகள் : நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், உடல் நலன் சார்ந்த மருத்துவ வரம்புகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தை பொருத்தவரையில் 120/80 என்ற அளவு இயல்பானது. இதைவிட கூடுதலாக ரத்த அழுத்தம் இருந்தால் நாம் விழித்துக்கொண்டு, வாழ்வியல் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆபத்துகளை தவிர்க்க வேண்டும் : ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால், “அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது, பின்னர் அதுவே பழக்கமாகிவிடும்’’ என்ற தவறான புரிதல் இந்திய மக்களிடம் உள்ளது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களுக்கு பலர் மருந்து எடுப்பதை தவிர்க்கின்றனர். இது மிக தீவிரவமான விளைவுகளுக்கு வழிவகை செய்யும் என்பதை மறக்க வேண்டாம்.