'ஆரோக்கியமே செல்வம்' என்பது நமக்கு தெரிந்திருந்தாலும் நமது பிஸியான வாழ்க்கை முறை காரணமாக உடல் ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறோம். ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து என்பதை மக்களுக்கு நினைவூட்ட ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஆம் தேதி உலக சுகாதார தினம் (World Health Day) கடைபிடிக்கப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார தினம் வரலாறு : சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நம் மனித இனம் கண்டுள்ளது. இதனால் நம்முடைய ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன மற்றும் பல மோசமான தொற்று நோய்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார தினம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பால் (WHO) அனுசரிக்கப்படுகிறது.
உலகத்தை ஆரோக்கியமான வாழ்க்கை என்ற ஒரு பொதுவான இலக்கை நோக்கி கொண்டு செல்ல WHO அமைப்பு கடந்த 1948-ல் பல நாடுகளால் ஒன்றிணைந்து நிறுவப்பட்டது. ஆரோக்கியத்தை மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அங்கமாக மேம்படுத்த. உலகைப் பாதுகாப்பாக வைக்க,ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மக்களுக்குப் புரியவைக்க இந்த அமைப்பு நிறுவப்பட்டது. முதல் உலக சுகாதார தினம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்பட்டது. இது WHO அமைப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து இந்த சிறப்பு நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
முக்கியத்துவம் : மக்களுக்கு சுகாதாரத்தை முக்கியத்துவம் பற்றி கற்பிப்பதற்கும், சுகாதார பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய மருந்துகள், ஆராய்ச்சி மற்றும் சுகாதார வசதிகளை அனைவரும், எல்லா இடங்களிலும் அணுகுவதை உறுதி செய்யவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த சிறப்பு நாள் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்க, தரமான வாழ்க்கையை வாழ வேண்டும் எனபதை நினைவூட்டுகிறது.
கருப்பொருள் : இந்த ஆண்டு ஏப்ரல் 7 அன்று, உலக சுகாதார தினம், WHO-வின் 75-வது ஆண்டு விழாவாக இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே 2023-ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் 'அனைவருக்கும் ஆரோக்கியம்' (Health For All) என்பதாக இருக்கிறது. இதனையடுத்து உலக சுகாதாரம் பற்றி விவாதிக்க WHO பல கருத்தரங்குகள், பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த தினத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆரோக்கியம் குறித்து கற்பிக்கும் நிகழ்வுகளையும் நடத்துகின்றன. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பற்றி பேச சோஷியல் மீடியாக்களில் லைவ் செக்ஷன்களை ஏற்பாடு செய்கின்றன.