உலக ஆஸ்துமா தினம் மே 3ம் தேதியான இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த நாள் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், ஆஸ்துமாவுடன் போராடுபவர்கள் தங்களை எவ்வாறு சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ளலாம் என்பதை பற்றிய தகவல்களை பரப்புவதற்கென்றும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக Global Initiative for Asthma (GINA) இந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாவிட்டாலும், ஆஸ்துமா தாக்குதல்களை குறைக்கவும் தடுக்கவும் முடியும். இதனிடையே இந்த ஆண்டு உலக ஆஸ்துமா தினத்தின் கருப்பொருள் ‘ஆஸ்துமா சிகிச்சையில் இடைவெளிகளை முற்றிலும் குறைப்பது’ (Closing Gaps in Asthma Care) என்பதாகும்.
ஆஸ்துமா என்றால் என்ன?ஆஸ்துமா என்பது சுவாச குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாகும். சுவாச குழல்கள் என்பவை மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீங்கி இருக்கும். சுவாசப்பாதைகள் சுருங்கி, வீங்கி கூடுதல் சளியை உருவாக்கி இயல்பாக சுவாசிப்பதை கடினமாக்கும் ஒரு நிலையே ஆஸ்துமா. ஆஸ்துமா ஒரு சிலருக்கு லேசான அசௌகரியமுடையதாக இருந்தாலும், ஒரு சிலருக்கு இது ஒரு பெரிய பிரச்சனை என்று குறிப்பிடுகிறார் கேரளா ஆயுர்வேத லிமிடெட்டில் பணிபுரியும் ஆயுர்வேத மருத்துவர் அர்ச்சனா சுகுமாரன்.
ஆஸ்துமா தாக்குதல் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார். மூச்சுத் திணறல், இருமல் மற்றும் மார்பு இறுக்கம் ஆகியவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள். ஆஸ்துமா ஏற்பட காரணம் நபருக்கு நபர் மாறுபடும். முக்கிய காரணிகளாக சிகரட் புகை, மரத்தூள், சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு, காலநிலை மாற்றம், மன அழுத்தம் உள்ளிட்டவை இருக்கின்றன.
ஆயுர்வேத சிகிச்சை மூலம் எவ்வாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம்?ஆஸ்துமா ஆயுர்வேதத்தில் தமகா ஸ்வாசா (tamaka swasa) என்று குறிப்பிடப்படுகிறது. இதில் tamaka என்ற சொல் இருளில் மூழ்கும் உணர்வை குறிக்கிறது. ஆஸ்துமாவை வாத மற்றும் கப தோஷத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு என ஆயுர்வேதம் கருதுகிறது. வாழ்க்கை முறை மற்றும் பருவகால மாற்றங்கள் மற்றும் எண்ணெய், ஹெவியான மற்றும் குளிர்ச்சியான உணவு காரணமாக வளர்சிதை மாற்ற நச்சுகள் குவிவதால் இந்த ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது என்கிறார் மருத்துவர் அர்ச்சனா சுகுமாரன்.
மேலும் பேசிய இவர் பாரம்பரிய ஆயுர்வேத வைத்திய முறையானது ஏற்பட்டிருக்கும் அறிகுறியை நிவர்த்தி செய்வதை விட அறிகுறியின் மூல காரணத்திற்கு சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறது. எனவே எந்த நோயையும் கையாள்வதற்கு ஆயுர்வேதம் ஐந்து முக்கிய படிகளை கொண்டுள்ளது. இதில் நோய்களை தூண்ட கூடியவற்றை தவிர்ப்பது என்பது எல்லா நோய்களிலிருந்தும் நிவாரணம் பெற கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கிய படி. சுத்திகரிப்பு நடைமுறைகள் (சோதனா), மருந்துகள், ஆரோக்கியமான டயட், யோகா மற்றும் பிராணயாமா உள்ளிட்டவையும் இங்கே முக்கிய படிகள் என்றார்.ஆஸ்துமாவின் ஆயுர்வேத வைத்தியத்திற்கு உதவும் சில பொருட்கள் இங்கே.
கற்பூரவல்லி: கற்பூரவல்லி ஒரு அரிய மூலிகையாகும், இது குளிர்ச்சியாக இருந்தாலும், கப தோஷத்தை சமன் செய்கிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இதை எடுத்து கொள்வதன் மூலம் ஆஸ்துமா உபாதைகள் தவிர்க்கலாம். கற்பூராதி தைலம் பயன்படுத்துவது காற்று பாதை தொற்றுகளை அழிக்கவும், சுவாசத்தை எளிதாக்கவும் விரைவான நிவாரணம் அளிக்கவும் பயன்படுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளை நிர்வகிக்க பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்: பால் பொருட்கள், குளிர் உணவுகள், புகை பழக்கம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்க்கவும்.உங்கள் மருத்துவர்கள் சொல்லும் வரை உங்கள் மருந்துகளை நிறுத்த வேண்டாம். உஸ்த்ராசனம், சர்வாங்காசனம் போன்ற யோகாசனங்களை செய்யலாம். நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய பிராணயாமா பயிற்சிகளை செய்யலாம்.