பொதுவாக உடற் பயிற்சிகள் உடலில் சூட்டை அதிகரிக்கும். அதுவும் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நீங்கள் உடற் பயிற்சிகளை செய்யும் போது, ஏற்கனவே வெப்பமாக உள்ள உங்களது உடல் மேலும் சூடாக தொடங்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளை செய்யும் அதேவேளையில், உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்ளவும் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமானது. குறிப்பாக, உலகெங்கிலும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள சூழலில், அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உடற் பயிற்சியை செய்யத் தொடங்கும் நேரமிது. இத்தகைய சூழலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான டிப்ஸ்களை கடைப்பிடிக்க மறக்காதீர்கள்.
தினசரி பழங்களை சாப்பிடவும் : கோடைகாலத்தில் உடல் மிகுந்த வெப்பம் அடையும். ஆகவே உங்கள் உடலை குளுமையாக வைத்துக் கொள்வது அவசியம். தினசரி ஒவ்வொரு வகையான பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், உடற் பயிற்சியின் போது தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதன் மூலமாக கிடைக்கும். குறிப்பாக கோடைகால பழங்களான தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களை சாப்பிடும் போது உடலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் நீர்ச்சத்து ஆகியவை நிறைவாக கிடைக்கும். மாம்பழமும் கோடைகால பழம் தான் என்றாலும் கூட, அதை ஆசைக்கு 1, 2 சாப்பிடுவதோடு விட்டுவிடுங்கள். மாம்பழங்களை சாப்பிடுவதால் உடலின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து மிகுந்த சாப்பாடு : நம் உடலுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது எப்போதும் அவசியமானது என்றாலும் கூட, கோடைகாலத்தில் வரக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராடும் அளவுக்கு சத்தான உணவுகள் எப்போதையும்விட கூடுதலாக தேவைப்படுகிறது. குறிப்பாக, நீங்கள் உடற்பயிற்சி செய்பவர் என்றால் உடலுக்கு நீர்ச்சத்து மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து மிகவும் அவசியம் ஆகும்.
உடற் பயிற்சியின்போது இடைவெளி தேவை : உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மிகக் கடினமான உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யக் கூடும். அதேசமயம் கோடைகாலத்தில் உடல் உடனுக்குடன் சோர்வடையும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கடினமான உடற்பயிற்சிகளை செய்யும் போது அவ்வப்போது இடைவெளி விடுவது அவசியமானது. இடைவெளியின்றி நீங்கள் உடற் பயிற்சிகளை செய்தால் உங்களுக்கு தலை சுற்றல், மயக்கம், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதனால் கடினமான உடற்பயிற்சிகளுக்கு இடையே உடலுக்கு ரிலாக்ஸ் கொடுக்கும் எளிய பயிற்சிகளைச் செய்யுங்கள்.