கார்டன் க்ரெஸ் விதைகள் என்பது கடுகு குடும்பத்துடன் தொடர்புடையது. ஹலிம் விதைகள் என்றும் இது அழைக்கப்படும். சிவப்பு நிறம் கொண்ட இந்த விதைகள்ஃபோலிக் அமிலம், இரும்பு, நார், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியது. சுவாச பிரச்சனைகள் வராமல் தடுப்பது முதல் ஹீமோகுளோபினை மேம்படுத்துவது வரை ஏராளமான நன்மைகளை தர கூடியது இந்த விதைகள். ஒரு பெண்ணின் உடலில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பின், அன்றாட உணவிலோ அல்லது இரவில் மஞ்சள் கலந்த பாலுடன் ஒரு சிட்டிகை சேர்த்தோ பருகி வந்தால் மிகவும் நல்லது.
மற்ற உலர் பழங்ளை விட உலர் திராட்சை பன்மடங்கு நன்மை தர கூடியது. பெரும்பாலும் இனிப்பு உணவுகளில் உலர்ந்த திராட்சை பயன்படுத்துவதை பார்க்கலாம். இந்த திராட்சையின் புளிப்பு கலந்த இனிப்பு அது சுரக்கப்படும் உணவையும் சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது. எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இது, உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக பெண்கள் குளிர்காலத்தில் லட்டு வடிவில் உலர் திராட்சையை சாப்பிட்டால் மிகவும் நல்லது. கணிக்க முடியாத மாதவிடாய் சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் தினம் சிறிதளவு உலர் திராட்சை சாப்பிடுவது சிறந்தது.
பெண்கள் தாங்கள் உண்ணும் உளவில் கரோட்டினாய்டு சத்துக்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் கரோட்டினாய்டுகள் நிறைந்திருப்பதால் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். அதேபோல வேர் காய்கறிகளில் வைட்டமின் பி, ஃபைபர் மற்றும் புரதம் நிறைந்துள்ளதால் செரிமான அமைப்பை சீராக்கவும் ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன
எண்ணற்ற தாது சத்துக்கள் கொண்ட அத்திப்பழத்தை பெண்கள் குறைந்தது வாரம் 3 முறையாவது சாப்பிட்டால் இது அவர்களது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அணுக்களை அதிகரிக்க செய்யும். அதேபோல நம் சமையலில் அன்றாடம் இடம்பிடிக்கும் பொருளான தேங்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவும். எனவே உலர்ந்த தேங்காயுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டு வரலாம். அது மட்டுமல்ல தினசரி தேங்காய் சாப்பிடுவது முடி வளர்ச்சியை தூண்டும்.
உடல் வளர்ச்சி மற்றும் உறுதிக்கு பெண்களுக்கு அவசியம் தேவைப்படுவது புரோட்டின். எனவே புரோட்டின் அதிகமாக உள்ள உணவுகளான மாமிசம் மற்றும் முட்டை உணவுகளை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். அரிசியானது உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் வைட்டமின் பி மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளதால் அரிசி உணவுகளையும் பெண்கள் தவறாமல் எடுத்து கொள்வது நலம்.