மனிதர்களுக்கு ஆரோக்கியம் என்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நன்றாக இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதேயாகும். அதுவே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வேலை, குடும்பம், பிள்ளைகளை கவனிப்பது போன்ற அன்றாட ஓட்டங்களுக்கு மத்தியில், அவர்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. இதனால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். அமெரிக்கப் பெண்களின் மரணத்திற்கு இதய நோய் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அங்கு 4 பெண்களில் ஒருவர் இதய நோயால் இறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பின்வரும் வழிமுறைகளை கையாள்வதன் மூலம் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும்.
உடற்பயிற்சி செய்தல் : இதய நோயைத் தடுப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால் பெண்களின் மன வலிமை அதிகரிப்பதுடன், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். வாரத்திற்கு குறைந்தது நான்கு நாட்களாவது 30 நிமிட உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அல்லது ஏரோபிக், கார்டியோ போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். அல்லது நடைபயிற்சி, ஜாகிங், நடனம், நீச்சல் போன்ற வெவ்வேறு பயிற்சிகளை செய்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும். இது போன்ற உடற்பயிற்சிகள் செய்யும் போது தங்கள் நண்பர்களுடனோ அல்லது கணவருடன் சேர்ந்து செய்யலாம். ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல ஊக்குவிப்பு கிடைக்கும். சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதிக்கு கார்டியோ மட்டும் போதாது. நீங்கள் அதை சில வலிமை நிறைந்த பயிற்சியுடன் சேர்த்து செய்ய வேண்டும். வலிமை பயிற்சி தசையை உருவாக்கி வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த பயிற்சிகள் மிகவும் முக்கியம்.
சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல் : ஊட்டசத்து மிகுந்த உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக விளங்குகிறது. சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம். ஒரு பெண்ணின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சமச்சீரான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமானது. சீரான உணவு உண்பது ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தொடங்குகிறது. தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் சர்க்கரை, உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கலோரிகள் நிறைந்திருக்கும். எனவே வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளை பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள், மீன், இறைச்சி, கொட்டைகள், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய், பால் போன்ற உணவுப் பொருட்களை அன்றாட உணவுப் பொருட்களில் சேர்த்துகொள்வது அவசியம்.
ஆரோக்கியமான தாம்பத்தியம் : பாலியல் ஆரோக்கியம் என்பது பெண்களின் வாழ்நாள் பிரச்சினை. அவர்கள் பாலியல் நோய்த்தொற்றுகளுக்கு (STIs) எதிராக தங்களைப் பாதுகாத்தல், குடும்பக் கட்டுப்பாடு முறையைக் கண்டறிதல், STI ஸ்கிரீனிங், பரிசோதனைகள் போன்றவற்றை செய்துகொள்வதன் மூலம் ஆரோக்கியமான தாம்பதியம் பெற முடியும். பாலியல் ஆரோக்கியத்தை கடைபிடிக்காவிட்டால், உடலுறவின் போது அவர்களுக்கு உச்சக்கட்டத்தை அடைய இயலாமை, வலிமிகுந்த உடலுறவு போன்ற பிரச்சனைகளை சந்த்திக நேரிடலாம். பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் துணையுடன் நல்ல தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.
பேறுகால ஆரோக்கியம் : நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, அல்லது அதற்கு முயற்சித்தாலும், உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியம் மிக அவசியம். எனவே உங்களை நீங்கள் கவனித்துக்கொள்வதன் மூலம் உங்கள் எதிர்கால குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவை பிறக்கப்போகும் குழந்தையை பாதிக்கலாம். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது. அதேபோல், சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலமும், மகப்பேறுக்கு முற்பட்ட வைட்டமின்களை உட்கொள்வதன் மூலமும், சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும், கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனிப்பதன் மூலமும் ஆரோக்கியமான குழந்தைக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு : குழந்தையின் மேல் பெற்றோர் அதிகாரத்தை திணிக்க வேண்டாம். குழந்தைகள் உங்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. உங்கள் முதல் குழந்தையின் வயது தான் உங்களின் உண்மையான வயது என்பதை மனதில் கொண்டு குழந்தைகளை வழிநடத்தவும். அவர்களுக்கு நம்பிக்கை, அன்பு, சூழ்நிலையை கையாளும் மனநிலை, உதவி செய்யும் மனநிலை வளர்த்தல். வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துதல். எந்த சூழ்நிலையிலும் நான் உனக்காக இருப்பேன் என்ற மனநிலை வளர்த்தல். குழந்தை முன் சண்டை போடாமல் இருத்தல். ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையை பெற்றோர் அறிய வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் சிறப்பான திறமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் ஊக்கமளித்து வளர்க்க வேண்டும்.
மார்பக ஆரோக்கியம் : பெண்களுக்கு மார்பக ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நிறைய பெண்கள் தங்கள் மார்பகத்தை கவனிக்காமல் இருப்பதே புற்றுநோய் போன்ற கட்டிகள் வரக் காரணமாக அமைகிறது. இதில் நிறைய பேருக்கு மார்பகம் தொங்கக் கூட ஆரம்பித்து விடுகிறது. எனவே பெண்கள் தங்கள் மார்பகத்தை அழகுடனும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். மார்பக புற்றுநோய் என்பது அமெரிக்கப் பெண்களில் மிகவும் பொதுவான வகை புற்றுநோய்களில் ஒன்றாகும். யுனைடெட் ஸ்டேட்ஸ் ப்ரிவென்டிவ் சர்வீசஸ் டாஸ்க் ஃபோர்ஸ் (USPSTF) நிறுவனம், 50 முதல் 74 வயதிற்குள் உள்ள பெண்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் மேமோகிராம் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இருப்பினும், பல மருத்துவர்கள் 40 வயதிலிருந்தே வருடாந்திர மேமோகிராம்களை பரிந்துரைக்கின்றனர். அதேபோல், இந்த மருத்துவ வல்லுநர்கள் பெண்களை 20 வயதில் இருந்து மாதந்தோறும் சுய-பரீட்சை நடத்த ஊக்குவிக்கிறார்கள்.