ஒரு பெண் உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கர்பப்பை. பெண் இனப்பெருக்க அமைப்பின் அடிப்படை பகுதியாகவும், வாழ்க்கையின் அஸ்திவாரத்திலும் கர்பப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய நவீன காலத்தில் திருமண வாழ்க்கையில் பல பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று கருவுறாமை. இன்று ஏராளமான பெண்கள் பி.சி.ஓ.டி / பி.சி.ஓ.எஸ் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோளாறுகள் இளம் வயதில் பெண்கள் இருந்தால் கூட அவர்களுக்கு கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
அதே போல கருவுறுவது தொடர்பான பிரச்சனைகளுக்கு குறிப்பிடத்தக்க காரணமாக இருக்கும் ஒன்று ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. ஆரோக்கியமான இனப்பெருக்க அமைப்பை பெற வேண்டும் எனில் அதற்கு ஆரோக்கியமான உடல் அவசியம். எந்தவொரு இனப்பெருக்க சிக்கல்களும் ஏற்படாமல் ஒருவர் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றுகிறாரா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். பெண் இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுகளை பற்றி பெண்கள் தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.
கார்போஹைட்ரேட் உணவுகள்: கருவுறுதலை அதிகரிக்கும் துத்தநாகம், செலினியம் மற்றும் பல பி வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் முழு தானியங்களில் நிறைந்துள்ளன. பழுப்பு அரிசி, ஓட்ஸ் மற்றும் முழு தானிய ரொட்டி போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். இவை ஹார்மோன் சமநிலை, கருவுறுதல் வாய்ப்பை அதிகரிக்கும் உணவின் இன்றியமையாத பகுதி. அதே சமயம் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உதாரணமாக வெள்ளை மாவு மற்றும் வெள்ளை சர்க்கரை போன்றவை பெரும்பாலும் இனிப்புகள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரி போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை ரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்து, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த கூடும். எனவே இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது.
கொழுப்பு நிறைந்த மீன்: சில வகை மீன்களில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொழுப்புகள் உள்ளன. இவை கருவுறுதலை அதிகரிப்பதை தவிர, வறண்ட சருமம், வறண்ட கூந்தல், உடையக்கூடிய நகங்கள், சோர்வு, எரிச்சல், எடை அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், மோசமான காயங்களை விரைவில் குணப்படுத்துதல், தோல் வெடிப்பை சரி செய்தல், முடி உதிர்வு பிரச்னை போன்றவற்றை சரி செய்யவும் உதவ கூடும்.
பெர்ரி: கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு பெர்ரிக்கள் உண்மையில் சிறந்த பலனை வழங்கும். கருவின் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெர்ரிக்கள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்தவை. ராஸ்பெர்ரி மற்றும் அவுரிநெல்லிகள் கருவுறுதலை அதிகரிக்க உதவுகின்றன.
பால் பொருட்கள்: பால் பொருட்களான யோகார்ட், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை அளவாக எடுத்து கொள்ளலாம். பாலின் பாக்டீரியா நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் யோகார்ட் வயிற்றுப் புண் மற்றும் யோனி நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கும். எலும்பு ஆரோக்கியதிற்கு உதவும் கால்சியம் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. எனவே ஒவ்வொரு பெண்ணும் ஒரு கப் யோகார்ட்டை ஃபிரஷ்ஷான பழங்கள் அல்லது நட்ஸ்கள் அல்லது விதைகளுடன் சாப்பிடுவது சிறந்தது.