ஆரோக்கியமான உடல் நலம் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக அமைகிறது. ஒவ்வொரு பெண்ணும், இதை விரும்புவார்கள். ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க பெண்களை ஊக்குவிப்பதும், ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியத்தையும் வலியுறுத்துவது அவசியமாகிறது. இதனால் பெண்களிடையே பொது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மேம்படும்.
சமீப காலமாக அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் மூலம் பிரபலங்களை போல் உடல் அமைப்பை பெற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இதற்காக சிலர் தாங்களாகவே கடின உடற்பயிற்சியில் ஈடுபடுவது, டயட் எனக் கூறி ஆரோக்கியமற்ற உணவுமுறைகளை கையாள்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். மேலும் சமீபகாலமாக பெண்களிடையே உடல் உருவம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இது அவர்களின் உடல் எடையைப் பற்றி உளவியல் ரீதியாக மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் பெண்கள் தனித்துவமானவர்கள், அழகானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எடை என்பது ஒரு எண் மட்டுமே : உடல் எடையை குறைப்பதால் மட்டுமே ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியாது. அதிக எடையுடன் இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். எடை என்பது ஒரு எண், ஆனால் முக்கியமானது உங்கள் உடல் அமைப்பு, இது உங்கள் தசை, உடல் கொழுப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தின் வகையை அளவிடுகிறது. எனவே, உங்கள் எடையைத் குறைப்பதில் கவனத்தை செலுத்துவதை விட, ஆரோக்கியமான அணுகுமுறைகள் மூலம் எடையை குறைக்கலாம் என்கிறார், பெங்களூருவை சேர்ந்த ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து உணவுமுறையின் தலைவர் திருமதி எட்வினா ராஜ்.
உங்கள் காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள் : ஒரு ஆரோக்கியமான காலை உணவு உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். உங்கள் தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் முக்கியமானது. காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவாகும். சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி காலை உணவைத் தவிர்ப்பதால் உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
கால்சியம் உட்கொள்வதை உறுதிப்படுத்தவும் : பெண்களுக்கு வயதாக அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைகிறது. மேலும் வலுவான எலும்புகளை பெற கால்சியம், வைட்டமின் டி போதுமான அளவு இருப்பதை கருத்தில் கொள்வது அவசியம். தயிர், பாதாம் பால், சோயா, கீரைகள், காய்கறிகள், மீன், பாதாம், எள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சமச்சீரான அளவில் உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அவை இதய நோய், உடல் பருமனை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள் : பிரசவம் முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை, ஒரு பெண்ணின் உடல் பல ஹார்மோன் மாற்றங்களுக்கு உட்படுகிறது. எனவே, 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பிற்காலத்தில் அவர்களைப் பாதிக்கக்கூடிய ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய வழக்கமான ஸ்கிரீனிங் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்தும் முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த பெண்களின் ஆரோக்கியமான எடை தினம், ஒட்டுமொத்த பெண்களின் நல்வாழ்வுக்கான ஒரு பரிசாக அமைவதை உறுதி செய்ய இந்நாளில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்.