உணவு, உடை, குடிநீர் போல அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக செல்ஃபோன் மாறியிருக்கிறது. சாதாரணமாக ஒருவரை தொடர்பு கொள்வது முதல் பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்துவதை தாண்டி, இன்றைக்கு வணிக ரீதியிலான பயன்பாடுகள், அலுவலக தகவல் பரிமாற்றங்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சகலத்திற்கும் தேவையானதாக செல்ஃபோன் இருக்கிறது.
கைகளை கழுவுவது கிடையாது : உணவு சமைக்கும் முன்பாக, சாப்பிடும் முன்பாக, கழிவறை சென்று வந்த பிறகு, தோட்டத்தில் வேலை செய்த பிறகு என பல சந்தர்பங்களில் நாம் கைகளை கழுவினாலும் கூட, அடுத்த நொடி செல்ஃபோனையும் பயன்படுத்துகிறோம். தரைகளில், அழுக்கான இடங்களில் வைக்கப்படும் செல்ஃபோனில் மிகுதியான கிருமிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
கிருமிகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் : பல இடங்களை நாம் பயன்படுத்தும் நிலையில் அங்கிருந்து பாக்டீரியா, கிருமி போன்றவை நம் கைகளில் ஒட்டிக் கொள்கின்றன. அவை அப்படியே செல்ஃபோனிலும் ஒட்டிக் கொள்கின்றன. நமக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக் கூடிய இ-கோலி, சருமத்தை பாதிக்கும் ஸ்டாஃபிலோகோசஸ், காசநோயை உண்டாக்கக் கூடிய ஆக்டினோபாக்டீரியா, வலி மிகுந்த அளவுக்கு சிறுநீர் தொற்றை உண்டாக்கும் சிட்ரோபேக்டர் போன்ற எண்ணற்ற கிருமிகள் பரவுகின்றன.
மருந்துகளால் குணப்படுத்த முடியாது? செல்ஃபோனில் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள் வழக்கமான ஆண்டிபயாடிக் கிருமிகளுக்கு கட்டுப்படாது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சருமம், குடல் நலன், சுவாசக் குழாய் போன்றவற்றை இவை பாதிக்கின்றன. ஃபோனில் உள்ள பிளாஸ்டிக் மீது சில வகை வைரஸ்கள் ஒரு வாரம் வரையிலும் உயிர் வாழுமாம்.
கிருமிகள் பரவ வாய்ப்பு இருக்கக் கூடிய கதவு கைப்பிடிகள், ஏடிஎம் இயந்திரங்கள், லிஃப்ட் பட்டன்களை போலவே செல்ஃபோன்களுக்கும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது. ஆகவே, தினசரி ஃபோன்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படும் நிலையில் கிருமிகள் நிறைந்த கழிவறை பக்கம் அவற்றை கொண்டு செல்லவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.