பிரசவத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை ஏன் அதிகரிக்கிறது என்பது எப்போதும் விவாதத்திற்குரிய தலைப்பாகவே இருந்து வருகிறது. நீங்களும் இதை பற்றி யோசிப்பவராக இருந்தால் அதற்கான விடை ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிறகான ஒரு நிலையான எடை அதிகரிப்பு ஒருவரின் வாழ்க்கை முறை தேர்வுகளின் விளைவாக இருக்கலாம் என்று கூறுகிறது ஒரு புதிய ஆய்வு.
ஒன்று முதல் நான்கு முறை வரை பிரசவித்த கிட்டத்தட்ட 30,000 பெண்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வில், பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்கு பிறகு கர்ப்பத்திற்கு முந்தைய உடல் எடைக்கு திரும்பவில்லை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், பிரசவத்திற்கு பிறகான 1 முதல் 2 ஆண்டுகளில் அதிகரித்த அவர்களின் எடை, ஒருவேளை அவர்கள் குழந்தை இல்லாத நிலையில் இருந்திருந்தால் அவர்கள் எவ்வளவு எடை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்கிறார்களோ அந்த எடைக்கு ஒத்ததாக இருந்தது.
ஆனால் குழந்தைகளை பெறாத பெண்களுடன் ஒப்பிடும் போது, குறுநடை போடும் வயது வரை உள்ள குழந்தைகளை கொண்ட தாய்மார்களுக்கு எடை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதற்கான காரணம் ஓரளவு தெளிவாகவே உள்ளது. பெண்களுக்கு வயது காரணமான எடை அதிகரிப்பு தோராயமாக ஆண்டுக்கு 1.94 பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவே குழந்தைகளை கொண்ட பெண்கள் ஆண்டுதோறும் சராசரியாக 1.94 பவுண்டை விட ஒரு கூடுதல் பவுண்டு அதாவது 2.94 பவுண்ட் வரை எடை ஏறுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இதற்கு தாய்மார்களின் வாழ்க்கை முறைதான் காரணம் என்று ஆராய்ச்சியாளர் யாகுஷேவா கூறியுள்ளார். இது பற்றி விரிவாக பேசிய அவர், "பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், தங்களை கவனித்துக் கொள்வதோ அல்லது உடற்பயிற்சி செய்வதோ இல்லை. தங்கள் குழந்தை மிச்சம் வைக்கும் உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பல வாழ்கை முறை மாற்றங்கள் அவர்களின் எடையை அதிகரிக்க செய்கின்றன.
ஆனால் பிரசவத்திற்கு முன்னும், பின்னும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பது பெண்களுக்கு மிகவும் நல்லது" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பேசிய அவர், கர்ப்பத்திற்குப் பிறகு உடல் உருவத்தின் நேர்மறையான எதிர்பார்ப்புகளை மேம்படுத்துவதற்கு, தாய்மை மற்றும் வயது தொடர்பான எடை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணங்களை புரிந்து கொள்வது முக்கியம் என்றார்.