

சாப்பிடும் உணவுக்கு ஏற்ப வாயின் துர்நாற்றம் மாறுபடும். உதாரணத்திற்கு வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் அதன் வாடை நன்கு தெரியும். இது அந்த நேரத்திற்கு மட்டும்தான் இருக்கும். ஆனால் சிலருக்கு உடல் நலக் குறைவுக் காரணமாக எப்போதும் வாயில் துர்நாற்றம் வீசும்.


குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்னை, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்களுக்கு வாய் துர்நாற்றம் வீசும். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் இனிப்பு மற்றும் பழத்தின் நாற்றம் கலந்த துர்நாற்றம் வீசும். இதை வைத்தும் அவர்களுக்கு சர்க்கரை நோயின் அறிகுறியைக் கண்டறிவார்கள்.இப்படி துர்நாற்றம் வீச என்னக் காரணம்..?


துர்நாற்றத்திற்கான முக்கியக் காரணம் இரத்ததில் கீடோன்களின் அளவு அதிகமாக இருப்பதுதான். அதாவது சர்க்கரை நோயாளிகளின் உடலில் இன்சுலின் அளவானது போதுமானதாக இருக்காது அல்லது சீராக இல்லாமல் தடைபடும்.


இதனால் உடலின் செல்களுக்கு போதுமான குளுக்கோஸ் கிடைப்பதில்லை. இதற்கு போதுமான எரிபொருள் சக்தி உடலில் இருப்பதில்லை. இதை ஈடுகட்ட கொழுப்பைக் கரைத்து ஆற்றலை உருவாக்கும். அந்த ஆற்றலை உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். இந்த கொழுப்பு குளுகோஸுக்கு பதிலாக செல்களில் சென்று சேருவதால் அவை கீட்டோனை அதிகரிக்கின்றன.


இந்த கீட்டோன்கள் இரத்தத்திலும் சிறுநீரகத்திலும் உருவாகத் தொடங்குகின்றன. எனவேதான் அதிக அளவிலான கீட்டோனை உடல் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளிகளின் வாய் துர்நாற்றம் வீசுகிறது.


இப்படி அதிக அளவிலான கீட்டோன்களை உடல் கொண்டிருப்பதும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும். இதை diabetic ketoacidosis (DKA) என்று அழைக்கின்றனர். இது டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாகவே காணப்படும்.


அவ்வாறு கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதன் அறிகுறிதான் வாய் துர்நாற்றம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது. அடிவயிறு வலி, குமட்டல், வாந்தி, அதிக குளுக்கோஸ் உருவாதல், மூச்சு இறைத்தல், தலை சுற்றல் போன்றவை உண்டாகின்றன.


இதை சரிசெய்ய முடியாது என்றாலும் வாயை எப்போதும் சுத்தம் செய்து நறுமணத்தை வரவைப்பதால் துர்நாற்றத்தைக் குறைக்கலாம்.