இந்த சூழலில் நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது கடினமாகிறது. தவிர குளிர்ச்சியான கிளைமேட் காரணமாக வழக்கமான உடல் செயல்பாடுகள் குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவை தவிர குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வேறு பல காரணிகள் உள்ளன. பொதுவாக குளிர் வெப்பநிலைக்கு நம் உடலின் இயற்கையான பதில், இன்சுலின் ரெஸிஸ்டென்ஸை அதிகரிக்கும் ஹார்மோன்களை வெளியிடுவது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உடல் சிரமப்படுகிறது. மேலும் விடுமுறை காலம், இதோடு தொடர்புடைய மன அழுத்தம் மற்றும் அதிக கலோரி அடங்கிய உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க பங்களிக்கின்றன.
எனவே நீரிழிவு நோயாளிகள் குளிர் சீசன்களில் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அடிக்கடி ரத்த சர்க்கரை அளவை கண்காணித்தல், வழக்கமான உடல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும். குளிர் சீசனில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க சில காரணங்களை விளக்குகிறார் பிரபல மருத்துவர் பன்ஷி சபூ.
அதிகப்படியான சர்க்கரை : நீரிழிவு நோயாளிகளுக்கு குளிர்காலம் மிகவும் சவாலானது. எனவே குளிர்கால உணவுகளை சாப்பிடும் போது அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கேரட்டுடன் தயாரிக்கப்படும் "கஜர் கா ஹல்வா" போன்ற பருவகால உணவுகள் மற்றும் இனிப்புகள் அடங்கிய உணவுகள் நீரிழிவு நோயாளிகளை கவர்ந்திழுக்கும். குளிர் சீசனின் போது நீரிழிவு நோயாளிகள் டயட்டில் இன்னும் கூடுதல் கட்டுப்பாடு காட்ட வேண்டும். இல்லை என்றால் இதுநாள் வரை கட்டுப்பாடாக வைத்திருந்த நீரிழிவு சீர்குலைந்து ரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்க கூடும்.
Raynaud நிலை : Raynaud என்பது குளிர் வெப்பநிலையால் குறிப்பாக கை மற்றும் கால்களில் ரத்த நாளங்கள் சுருங்கும் ஒரு நிலையாகும். இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணர்விழப்பை ஏற்படுத்தும். கூடுதலாக Raynaud ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் காரணமாக இருக்கலாம். குளிர் அல்லது ஸ்ட்ரஸ் காரணமாக தோலுக்கு ரத்தத்தை வழங்கும் சிறிய ரத்த நாளங்கள் சுருங்கி விடும். இது தீவிரமாகும் போது தோலின் நிறத்தில் மாற்றமும் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் Raynaud-ஆல் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே நீரிழிவு நோயை எவ்வாறு நிர்வகிப்பது என தனிப்பட்ட சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியம்.
தவறான அளவீடுகள்: குளிர் சீசனில் நிலவும் குளிர்ச்சியான வெப்பநிலை நீரிழிவு அளவிடும் கருவிகள் மற்றும் உபகரணங்களையும் கூட பாதிக்கலாம், இது தவறான அளவீடுகளுக்கு வழிவகுக்கும். தவிர லோ பிளட் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர குளிர்காலநிலையில் ஏற்படக்கூடிய மோசமான ரத்த ஓட்டம் உள்ளிட்டவை நீரிழிவு பரிசோதனை ஸ்ட்ரிப்ஸ்களின் (diabetes testing strips) துல்லியத்தை பாதிக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் துல்லிய அளவீடுகளை உறுதிப்படுத்த டெஸ்ட் எடுக்கும்முன் உடல் வெப்பநிலை சாதாரணமாக இருப்பதை உறுதி செய்வது அவசியம். ஹீட்டிங் பேட், ஹாட் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட சில வழிகள் மூலம் உடல் வெப்பநிலையை இயல்பாக வைக்கலாம்.
டயட்: குளிர்கால நீரிழிவு அதிகரிப்பை சமாளிக்க உணவு கட்டுப்பாடு மிக முக்கியம். இந்த சீசனில் அதிக கலோரி உணவுகள் அல்லது சர்க்கரை உணவுகளை உட்கொள்வது நீரிழிவு கட்டுப்பாட்டை சீர்குலைத்து ரத்த சர்க்கரை அளவைவை அதிகரிக்கும். எனவே பிடித்த உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரைக்கு பதில் சரியான அதே சமயம் ஆரோக்கியமான மாற்றை கண்டறிந்து சேர்க்கவும். . நீரிழிவு மேலாண்மை என்பது ஆரோக்கிய ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது என்பதை பாதிக்கப்பட்டவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.