உடல் எடையை குறைத்து, கட்டுக்கோப்பாக காட்சியளிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத் தான் இருக்காது? இதற்காக பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர் என்றாலும் கூட, நாம் எதை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நம்மிடையே குழப்பம் நிலவக்கூடும்.உதாரணத்திற்கு, தினசரி ஓட்டப்பயிற்சி செய்வதன் மூலமாக சில கிலோ வரை எடை குறைந்திருப்பதாக நம் நண்பர் ஒருவர் நம்மிடம் சொன்னால், உடனடியாக நாம் அதைச் செய்ய ஆவல் கொள்வோம். அடுத்த நாள் வேறொரு நண்பர், நான் சைக்கிளிங் செய்ததன் மூலமாக எடையை குறைத்ததாக கூறினால், நம் மனம் உடனே அதற்கு தாவிவிடும். பொதுவாக ரன்னிங் மற்றும் சைக்கிளிங் ஆகிய இரண்டுமே உலகெங்கிலும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு செய்யக் கூடிய உடற்பயிற்சிகள் தான். இதில், எது சிறந்தது, எது எடையை குறைக்க உதவும் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
கலோரி பயன்பாடு: என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதோடு, அதை எந்த அளவுக்கு தீவிரமாக, எவ்வளவு நேரம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து கலோரி பயன்பாடு மாறுபடுகிறது. பொதுவாக சைக்கிளிங்கை காட்டிலும் ஓட்டப் பயிற்சியில் அதிகப்படியான கலோரி செல்வாகிறது. ஒரு மணி நேரம் வேகமாக நீங்கள் ஓடினால் 566 கலோரி முதல் 839 கலோரிகள் வரையில் செலவாகிறது. அதுவே ஒரு மணி நேர சைக்கிளிங் பயிற்சியில் 498 முதல் 738 கலோரிகள் வரையிலும் செலவாகிறது. உங்கள் எடை, வயது, பாலினம் போன்ற காரணங்களால் கலோரி பயன்பாட்டு அளவு மாறுபடும்.
காயம் : நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர், ஹார்ட் அட்டாக் பிரச்சனையை எதிர்கொண்டவர் அல்லது அதிக ரத்த அழுத்தம் கொண்டவர் என்றால், சைக்கிளிங் செல்வதே நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். சைக்கிளிங் செல்வதைக் காட்டிலும் ரன்னிங் செல்லுகையில் நம் உடல் காயம் அடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அது மட்டுமல்லாமல், அது மிகுந்த சிரமம் உடைய காரியமாகும்.
செலவு : நீங்கள் ஓட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என்றால், ஒரு ஜோடி ஷூ வாங்குவதை தாண்டி பெரிய செலவுகள் எதுவும் இருக்காது. அதுவே சைக்கிளிங் செய்வதாக இருந்தால், முதலிலேயே பெரும் தொகை கொடுத்து சைக்கிள் வாங்கிவிட வேண்டாம். முதலில் நண்பரிடம் கடன் பெற்று அல்லது வாடகை சைக்கிள் எடுத்து முயற்சி செய்து பாருங்கள். பின்னர் அது ஒத்து வந்தால் புதிய சைக்கிள் வாங்கிக் கொள்ளலாம். செகண்ட் ஹேண்ட் சைக்கிள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஆன்லைன் நிறுவனங்களில் நிரம்பிக் கிடக்கின்றன.
எதில் எடை குறைகிறது : எந்தப் பயிற்சியை நீங்கள் செய்தாலும், அதை எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் செய்கிறீர்கள், அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் போன்ற காரணங்கள் அடிப்படையில் எடை தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், பொதுவாக எடுத்துக் கொண்டால், சைக்கிளிங் செல்வதைக் காட்டிலும் ரன்னிங் செய்தால் உடல் எடை அதிகபடியாக குறையும்.
எதைத் தேர்வு செய்வது: உங்களுக்கு எது சௌகரியமானதாக இருக்கிறது, எது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்பதைப் பொருத்து தேர்வு செய்ய வேண்டும். இரண்டையும் முயற்சி செய்து, எது பிடிக்கிறதோ அதை தேர்வு செய்யலாம். நண்பர்களுடன் கூட்டு சேர்வதாக இருந்தால், அவர்கள் முயற்சி செய்வதை நீங்களும் தேர்வு செய்யும்போது உங்களுக்கும் ஒரு துணை கிடைக்கும்.